சென்னை: திமுக எம்.எல்.ஏ. கே.பி. சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது பதவி நீக்கத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், சென்னையை அழகு படுத்தும் நோக்கில் சிங்காரச்சென்னையாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சிங்காரச் சென்னை-2 என்ற பெயரில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, சாலையோரங்களில் குப்பைக் கொட்டக்கூடாது என உத்தரவிடப் பட்டு இருப்பதுடன், சென்னையை சுத்தப்படுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அத்துடன் பொதுஇடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், மீறி குப்பை கொட்டுபவர்கள் குறித்து புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டதுதன், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்ததுடன், அதை கண்காணிக்க பறக்கும் படைகளும் அமைத்து உத்தரவிட்டார்.
அதுபோல, சென்னை முழுவதும் மழைநீர் தேங்காதவாறு சாலைகள் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இரவு நேரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல பணிகள் திருவொற்றியூர் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. திருவொற்றியூர் பகுதியில் பல சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில், திருவொற்றியூர் மண்டலத்தில் பல சாலைகள் அமைக்க ₹3 கோடி மதிப்பிலான டெண்டரை சாலை இணைப்பு உள்கட்டமைப்பு என்ற ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி ஒதுக்கியது. அதைத்தொடர்ந்து சாலைகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருவொற்றியூர் நடராஜன் கார்டனில் புதன்கிழமை (26ந்தேரி) இரவு கார்டன் முதல் தெரு, இரண்டாவது தெரு மற்றும் மூன்றாவது தெரு ஆகிய இடங்களில் ₹30 லட்சம் செலவில் ஒரு குறிப்பிட்ட சாலை போடப்பட்டு வருகிறது. இங்கு நள்ளிரவு 1.30 மணி அளவில் அங்கு வந்த கே.பி.சங்கர் மற்றும் அவரது உதவியாளர் மற்றும் கட்சியினர் 4 பேரும் ஒப்பந்தாரரிடம் தகராறு செய்து, சாலைப் பணியையும் நிறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி பறக்கும்படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, அரசு மற்றும் மாநகராட்சி உத்தரவுபடி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மீண்டும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது.
இதைக்கண்டு கோபமடைந்த கேபி. சங்கர், “நான் பணியை செய்யக்கூடாது என ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தும் பணியை தொடர்வாக என கோபமடைந்ததுடன், மாநகராட்சி உதவியாளரை பார்த்து, இதை சொல்ல நீ யார் என்று கூறியதுடன், எம்எல்ஏ கே.பி.சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும், பொறியாளரின் உதவியாளரும் தாக்கப்பட்டார். மேலும், அங்கு சாலை அமைக்கும் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 13 லாரி ரோடு கலவை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாநகராட்சி பொறியாளர் அடுத்த நாள் விடுமுறையில் சென்றதுடன் , இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடிக்கு, தான் தாக்கப்பட்டது குறித்தும், தனக்கு நியாகம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தர். சாலை பணிகளை அமைப்பதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், கே.பி.சங்கர் எம்எல்ஏவும், அவரது ஆட்களும் எங்கள் அனைவரையும் அடித்தனர். நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் எங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தோம் என்று தெரிவித்து உள்ளார்.
இந்த பிரச்சினை பூதாகரமான நிலையில், கேபி.சங்கர் எம்எல்ஏ, தாக்கப்பட்ட பொறியாளருடன் தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் தானும் தனது ஆட்களும் யாரையும் அடிக்கவில்லை என்று மறுத்ததுடன், “எனது ஆட்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பணியை நிறுத்தியது உண்மைதான். அவர்கள் சாலையை முறையாக அமைக்காததே இதற்குக் காரணம். சாலை அமைக்கும் பணி விதிமுறைப்படி இல்லை. வேறு எதுவும் நடக்கவில்ல என்று தெரிவித்து உள்ளார்.
ஆனால், ஒப்பந்ததாரர், திருவொற்றியூர் மண்டலத்தில் சாலை அமைக்கும் பணிக்கு உரிய கமிஷன் எம்எல்ஏவுக்கு கொடுக்காததால்தான், சாலை அமைக்க எம்எல்ஏ இடைஞ்சல் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கூறியுள்ள ஒப்பந்தரார் பிரதிநிதி, இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்தால், எதிர்காலத்தில் காண்டிராக்ட் கிடைப்பதில் சிக்கல் எற்படும் என்பதால், நாங்கள் காவல்துறையில் புகார் கொடுக்கவில்லை என்று கூறியதுடன், மாநகராட்சி ஊழியர் தாக்கப்பட்ட இந்த விஷயத்தில் மாநகராட்சியே உரிய நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருப்பதால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கே.பி.சங்கர் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. ரவுடிசம், மற்றும் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததாக தொடர் புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இவரது செயல்பாடுகள் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது சாலை அமைக்கும் பணியில் இடையூறு செய்ததால், அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டு உள்ளது.