தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

தற்போதைய நிலையில், அதிமுக கூட்டணியைவிட, திமுக கூட்டணி உறுதியாக இருக்கும் நிலையில், அக்கூட்டணியிலுள்ள சில சிறிய கட்சிகளை(மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மற்றும் மனிதநேய மக்கள் கட்சி), திமுக, தனது உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு நிர்ப்பந்திப்பதாகவும், அதற்கு, சிறிய கட்சிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், இதனால், கடைசிநேரத்தில் கூட்டணிக்கூட உடையலாம் என்றும் செய்திகள் பல உலவுகின்றன.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில், புதிய தமிழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போன்றவை கணிசமான தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு தனிச்சின்னத்தில் போட்டியிட்டன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் இருந்தாலும்கூட, அது அவ்வளவு பிரபலம் கிடையாது.

இப்படியான சிறிய கட்சிகள், கணிசமான தொகுதிகளை வாங்கிக்கொண்டு, தனித்தனி சின்னங்களில் போட்டியிட்டதால், அந்த தொகுதிகள் அனைத்திலும் அதிமுக வென்றது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மட்டும் ஒரேயொரு தொகுதியில் வென்றது. காங்கிரஸ் 41 தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு, வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே வென்றது ஒரு தனிக்கதை என்றாலும்கூட, இந்த சிறிய கட்சிகள் திமுகவுக்கு செய்த சேதாரம் மிக அதிகம்.

சரி, தற்போதைய திமுக கூட்டணியில் உண்மையிலேயே நிலைமை என்ன? என்பதைப் பற்றி ஆராய வேண்டாம். தனக்கென தனிச்சின்னம் இல்லாத ஒரு கட்சி, தேர்தல் நேரத்தில் ஏதோ ஒரு சின்னத்தைப் பெற்றுக்கொண்டு, அதில் போட்டியிடுவதால் உண்டாகும் பாதகங்கள் குறித்துப் பார்க்கலாம்.

வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக – பாஜக கூட்டணி அமைவது உறுதி என்றுதான் இதுவரை சொல்லப்பட்டு வருகிறது. அதேசமயம், சட்டமன்ற தேர்தலில், எக்காரணம் கொண்டும் திமுக – காங்கிரஸ் கூட்டணி வென்றுவிடக்கூடாது என்று கங்கனம் கட்டிக்கொண்டு அலைகிறது மத்திய ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பாஜக. தேர்தலில் ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை அரங்கேற்றுவதற்கு அவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

நிலைமை இப்படியிருக்க, திமுக கூட்டணியில், தமக்கென தனிச் சின்னம் பெற்றிராத சிறிய கட்சிகள், தேர்தல் நேர சின்னங்களை வாங்கிப் போட்டியிடும்போது, திமுக கூட்டணிக்கு நிலைமை மோசமாகும் என்பதே உண்மை.

வாக்குப் பதிவு இயந்திரத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னங்கள்தான் முதல் வரிசையில் இருக்கும். பிற சின்னங்கள் பின்வரிசைக்குத் தள்ளப்படும். அதுவும் தற்போதைய நிலையில், திமுக கூட்டணியில் சிறிய கட்சிகளின் தனிச்சின்னங்கள், வேண்டுமென்றே இன்னும் பின்வரிசைக்குத் தள்ளப்படலாம்.

இன்னொரு பிரச்சினை என்னவென்றால், சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்களைப் போலத்தான். அவர்களுக்கென்று தனியான சின்னம் கொடுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட தொகுதிகளில், திமுக கூட்டணியின் சிறிய கட்சியினுடைய வேட்பாளர்களின் பெயரிலேயே(இனிஷியல் முதற்கொண்டு) இன்னொருவரை, அதிமுக – பாஜக கூட்டணி தேடிப்பிடித்து, அவரை வேண்டுமென்றே களத்தில் நிறுத்தும்.

அவர்களின் திட்டப்படி, வேண்டுமென்றே சுயேட்சையாக நிறுத்தப்படும் அந்த வேட்பாளர்களின் பெயர்கள், தற்காலிக தனிச் சின்னத்தில் போட்டியிடும் திமுக கூட்டணியின் சிறிய கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர்களை முந்தி, வரிசையில் முதலில் இடம்பெறுமாறு செய்யப்படும். இதனால், சராசரி வாக்காளர்கள் எவ்வளவு குழப்பமடைவர் என்று சொல்லத் தேவையில்லை. அவர்களுக்கு, சிறிய குழப்பம் ஏற்பட்டால்கூட, வரிசையில் முதலில் இருக்கும் போட்டி சுயேட்சை வேட்பாளருக்கு(வேண்டுமென்றே நிறுத்தப்பட்டவருக்கு), பொத்தானை அழுத்திவிடுவர்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் இடம்பெற்றுள்ள சின்னங்களின் நீண்ட வரிசையில், தொடர்ச்சியாக மற்றும் கவனமாக, சிறிய கட்சிகளின் வேட்பாளர்களின் பெயர் & அவர்களின் சரியான சின்னத்தை தேடிச்செல்லும் பொறுமை, பல வாக்காளர்களுக்கு இருக்காது என்பதே உண்மை.

எனவே, இக்காரணத்தால்தான், தனிச்சின்ன அங்கீகாரம் இல்லாத தனது சிறிய கூட்டணி கட்சிகளை, தனது உதயசூரியன் சின்னத்திலேயே நிற்குமாறு திமுக வலியுறுத்துகிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது!