காவிரி நீருக்கான போராட்டத்தின்போது கன்னட மக்களுக்கு எதிராக சத்யராஜ் கருத்து தெரிவித்தார் என்று, அவர் நடித்திருக்கும் பாகுபலி 2 திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விடமாட்டோம் என்று அங்குள்ள கன்னட அமைப்புகள் சில போராட்டங்களை நடத்தின.
இதையடுத்து சத்யராஜ் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இதனால் பாகுபலிபடத்தின் 2ஆம் பாகத்திற்கு எதிரான போராட்டத்தைக் கைவிடுவதாக கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து எந்தவித பிரச்சினையும் இன்றி வரும் 28ம் தேதி கர்நாடகாவிலும் வெளியாகிறது இப்படம்.
அதே நேரம் சத்யராஜ் வருத்தம் தெரிவித்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து அவரது கருத்தை அறிய அவரது செல்போன் எண்ணில் தொடர்புகொண்டோம். பலமுறை தொடர்புகொண்டும் சத்யராஜ் நமது அழைப்பை ஏற்கவில்லை.
ஆகவே நேற்று 21.04.2017 (சனிக்கிழமை) மதியம் சுமார் 12 மணிக்கு அவரது வாட்ஸ்அப்புக்கு நமது கேள்விகளை அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருந்தோம்.
சத்யராஜ் நமது கேள்விகளை படித்துவிட்டார் என்றாலும் இதுவரை (22.04.2017 – ஞாயிறு- இரவு 9.00 மணி வரை) அவரிடமிருந்து பதில் இல்லை. ஆகவே மீண்டும் அவரது எண்ணில் அழைத்தோம். இப்போதும் அழைப்பை ஏற்கவில்லை.
ஆகவே அவருக்கு நாம் அனுப்பிய கேள்விகளை மட்டும் இங்கே வெளியிடுகிறோம். அவர் பதில் அளித்தால் அப்படியே வெளியிடவும் தயாராக இருக்கிறோம்.
நாம் சத்யராஜ் முன் வைத்த கேள்விகள்:
1. முன்பு குசேலன் படத்துக்காக ரஜினி.மன்னிப்பு கேட்டபோது ”
ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டிருப்பதன் மூலம் தன்னையும், தன்னை வாழவைத்த தமிழக ரசிகர்களையும் அவமானப்படுத்தி விட்டார்.
என்னைப் பொறுத்தவரை முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன். இதுபோன்ற ஒரு நிலைமை நான் நடித்த படத்திற்கு ஏற்பட்டிருந்தால், தயாரிப்பாளர் நஷ்டபடக்கூடாது என்பதற்காக என் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருப்பேன்..”.என்று சொன்னீர்கள். இப்போது நீங்களே வருத்தம் – மன்னிப்பு கேட்டிருக்கிறீர்கள். இது குறித்து தங்கள் கருத்து..?
2. தங்களை பெரியாரிஸ்ட் எனச் சொல்லிக்கொள்கிறீர்கள். “பத்தினி – வேசி… என்கிற இரண்டு பதங்களும் பெண்களைக் கொச்சைப்படுத்துபவையே” என்றார் பெரியார். நீங்கள் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்ட நபரின் பெயரைச் சொல்லி “அவர் வேசிமகன்தானே… ஆம் என்பவர் கைதூக்குங்கள்” என்றீர்கள் ஒரு பெரியாரிஸ்ட் இப்படிப் பேசவாரா என்கிற விமர்சனம் அப்போதில் இருந்து இருக்கிறது. இது குறித்து.
3. தங்களை “பெரிய மனுசன்” என்று கமல் ட்விட் செய்திருக்கிறார் அவரது விருமாண்டி படத்தில் “மன்னிப்பு கேட்பவன் பெரிய மனுசன்” என்று ஒரு வசனம் வரும். ஆனால் சிலர் நீங்கள் “தன்மானத்துடன்” விளக்கம் அளித்திருப்பதாக சொல்கிறார்கள். கமலோ மன்னிப்பு என்கிறார். இது குறித்து..