2021 செப்டம்பர் மாதம் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்தார் விராட் கோலி.

தோனிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பதவியை ஏற்று ஏழு ஆண்டுகள் பல்வேறு வெற்றிகளை ஈட்டிய விராட் கோலியை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து ஓசையின்றி வெளியேற்றியது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

இதனைத் தொடர்ந்து தற்போது டெஸ்ட் போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருக்கிறார், 68 டெஸ்ட் போட்டிகளில் 40 போட்டிகளில் வெற்றி பெற்று 58.82 சதவீத வெற்றியை தேடித்தந்த விராட் கோலி கண்ணியமாக வெளியேறிய விதம் அவரது ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளது.

அணிக்காக பல்வேறு வெற்றிகளை பெற்றுத் தந்த போதும் தன்னை ஓரங்கட்டிய நிர்வாகத்தையோ தேர்வு குழுவையோ எந்த ஒரு குறையும் சொல்லாமல் இந்திய கிரிக்கெட்டை மீண்டும் உயர்த்தி பிடித்திருக்கும் விராட் கோலி, ரசிகர்களால் என்றும் கொண்டாடப்படுவார் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.