அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அந்நாட்டு அரசு அவ்வப்போது வெளியேற்றுவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் அதிபர் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் முதல் வேலையாக சட்டவிரோத குடியேறிகள் மீது கவனம் செலுத்தினார்.
கனடா, மெக்ஸிகோ, பிரேசில், கொலம்பியா, கவுதிமாலா, பெரு, ஹோண்டுராஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை சிறைபிடித்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார்.
இதில் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ வழியாக ஊடுருபவர்களை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் அந்நாட்டு அரசுக்கு அறிவுறுத்திய டிரம்ப் தவறினால் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அதேபோல், சிறைபிடிக்கப்பட்ட கொலம்பிய நாட்டைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை ராணுவ விமானம் மூலம் கைதிகள் போல் கை விலங்கிட்டு அழைத்து வர கொலம்பியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து பயணிகள் விமானம் மூலம் கொழும்பிய பிரஜைகளை அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியது.
இருந்தபோதும், பிரேசில், கவுதிமாலா, பெரு, ஹோண்டுரஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் சட்டவிரோத குடியேறிகளை தனது அதிநவீன C-17 குளோப்மாஸ்டர் ராணுவ சரக்கு விமானம் மூலம் அமெரிக்கா அழைத்துச் சென்றது.
அமெரிக்க இராணுவத்தின் C-17 குளோப்மாஸ்டர் விமானம் ஒரு மணி நேரம் வானில் பறக்க $28,500 (சுமார் ரூ. 25 லட்சம்) செலவாகும் என்று கூறப்படுகிறது.
அதாவது, 5 மணி நேர பயணத்திற்கான இந்த இராணுவ விமானத்தின் பயணச் செலவு சுமார் ரூ. 1 கோடியே 25 லட்சம் ஆகும்.
135 புலம்பெயர்ந்தோரை பயணிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்ப ஒரு மணி நேரத்திற்கு 17 ஆயிரம் டாலர்கள் (சுமார் 15 லட்சம் ரூபாய்) செலவாகும்.
பயணம் குறைந்தது 5 மணிநேரம் என்றால், இந்த செலவு 85 ஆயிரம் டாலர்களை (சுமார் 75 லட்சம் ரூபாய்) எட்டும். அதாவது, ஒரு நபருக்கு 630 டாலர்கள் (சுமார் 55 ஆயிரம் ரூபாய்) செலவாகும்.
சமீபத்தில், குவாத்தமாலாவிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தச் செயல்முறைக்கான செலவு ஒரு நபருக்கு $4,675 (தோராயமாக ரூ. 4,10,000) ஆகும்.
இது ஒரு சிவில் விமானத்தின் விமான கட்டணத்தை விட 5 மடங்கு அதிகம். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இதே இடத்திற்கு பயணம் செய்ய, ஒரு நபருக்கு $853 (ரூ. 75,000) மட்டுமே செலவாகும்.
அமெரிக்கா-வின் அருகே உள்ள குவாத்தமாலா நாட்டிற்கு பயணம் செய்வதற்கே இத்தனை அதிகமான பணத்தை அமெரிக்கா செலவு செய்திருக்கும் நிலையில் அதைவிட பலமடங்கு தூரம் அதிகமுள்ள இந்தியாவுக்கு ராணுவ விமானத்தை அனுப்பியது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.