டெல்லி
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியர்களை கை விலங்கு அணிவித்து அமெரிக்கா நாடு கடத்தியது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அமெரிக்கா, சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த இந்தியர்களை C-17 என்ற ராணுவ விமானத்தில் அனுப்பி வைத்தது.
இவ்வாறுஅனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்கள் குறித்து அமெரிக்க எல்லைக் காவல்படையினர் வெளியிட்ட வீடியோவில், இந்தியர்கள் கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்தது. இது குறித்து வெளியுறவுத்துறை விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இந்திய கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்,
“104 இந்தியர்கள் திரும்பி வந்த விவகாரத்தில் புதிய நடைமுறை பின்பற்றப்படவில்லை; அமெரிக்க ராணுவ விமானத்தில் அனுப்பும்போது கை விலங்கு போடும் நடைமுறை 2012 முதல் அமலில் உள்ளது; அதன்படி, அவர்களுக்கு கை, கால்களில் விலங்கு போடப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடப்படவில்லை.
சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து நாட்டினரையும் அமெரிக்கா வெளியேற்றி வருகிறது; சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது புதிதல்ல. இந்தியர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அமெரிக்காவின் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் எந்த நடைமுறை மாற்றமும் இல்லை; கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்ததால் கழிவறைக்கு செல்வதில் கூட சிரமத்தை சந்தித்துள்ளனர்; திரும்பி அனுப்பப்படும் இந்தியர்களை, மரியாதையுடன் நடத்த அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்”
என விளக்கம் அலித்துள்ளார்