இன்று தனது புதிய கட்சியை அறிவிக்க கமல் மாநாட்டை நடத்த இருக்கும் நிலையில், சமூகவலைதளங்களில் “பொய் சொல்கிறார் கமல்” என்ற விமர்சன்த்துக்கு ஆளாகி இருக்கிறார்.
கட்சி துவக்கப்போவதாக அறிவித்ததில் இருந்தே மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மீது பெரும் மரியாதை பாராட்டி வருகிறார் கமல். “கட்சி அறிவிப்பு வெளியிடும் முன்பு கலாமின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் வாழ்த்து பெறுவேன். கலாம் படித்த பள்ளிக்கும் சென்று பார்வையிடுவேன்” என்றார் கமல்.
அதன்படி இன்று காலை ராமேஸ்வரம் சென்று, கலாம் குடும்பத்தினரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஆனால் கலாம் படித்த பள்ளிக்கு அவர் செல்ல முடியவில்லை. அரசியல் ரீதியான காரணத்துக்காக பள்ளிக்கு வருவதை அனுமதிக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை தடை விதித்துவிட்டது.
ஆனாலும் “அப்துல் கலாமின் இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கியது பெரும்பேறு” என்றார் கமல்.
இந்த நிலையில் செய்தியாளர் ஒருவர் கமலிடம், “கலாம் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறீர்களே.. அவரது இறுதி ஊர்வலத்தில் நீங்கள் கலந்துகொள்ளவில்லையே” என்று கேட்டார்.
உடனே கமல், “இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பது எனக்கு வழக்கமில்லை” என்று பதில் அளித்தார்.
ஆனால் கமல் அளித்த பதில் உண்மைக்கு மாறானது.
சக கலைஞர்கள் மரணமடைந்தபோது இறுதிச்சடங்குகளில் அவர் கலந்துகொண்டிருக்கிறார்.
மனோரமா, வாலி, பாலமுரளிகிருஷ்ணா உட்பட பலரது இறுதிச்சடங்குகளில் மிகுந்த துயருடன் அவர் பங்குகொண்டிருக்கிறார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு, பெசன்ட் நகர் மின் மயானம் வரை வந்த அவர், “தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள எம்.எஸ்.வி. நினைத்ததே இல்லை” என்று நெகிழ்ந்தார்.
ஜெமினி கணேசன் இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டார்.
தனது குருநாதர் கே. பாலச்சந்தர் மறைந்தபோது, உத்தமவில்லன் படத்தின் பணி காரணமாக அமெரிக்காவில் இருந்தார் கமல்.
தகவல் கிடைத்ததும் விமானம் ஏறத் தயாரானார். ஆனால் மறுநாள் விமானம் வருதற்குள் கே.பி.யின் இறுதிக்காரியங்கள் நடந்து முடிந்துவிடும் என்று அவருக்குத் தகவல் சொல்லப்பட்டது. ஆனாலும் கிளம்பிவந்த கமல், கே.பி. குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பினார்.
ஆக, எத்தனையோ பேரின் இறுதிக் காரியங்களில்.. இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்த கமல்.. “எனக்கு அது வழக்கமில்லை” என்று ஏன் சொல்ல வேண்டும்?
எதிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும், பேசும் கமல் இப்படி மாற்றிப் பேசியது ஏன்?