நியூஸ்பாண்ட்:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிலதா,  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்தே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஜெ., உடல் நிலை, வதந்தி, மரணச் செய்தி, ஓ.பி.எஸ். பதவியேற்பு, சசிகலா பொதுச்செயலாளரானது, பாஜக வியூகம், சசிகலா சிறை, எடப்பாடி, தீபா.. என்று விநாடிக்கு விநாடி பிரேக்கிங் நியூஸ்தான். இப்போது அந்த  பிரேக்கிங் வரிசையில் சேர்ந்திருக்கிறார் தீபக்.

நியூஸ்பாண்ட்

ஜெயலலிதாவின் அண்ணன் மகனான இவர், ஆரம்பத்தில் இருந்தே “சசிகலா ஆண்ட்டிக்கு” ஆதரவாகத்தான் இருந்தார். கடந்த டிசம்பர் 6ம் தேதி ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோது, சசிகலாவால் அழைக்கப்பட்டு இறுதிச் சடங்குகளில் பங்கு பெற்றார்.

அந்க நேரத்திலேயே, “சசி அத்தைதான் ஜெயலலிதா அத்தைக்கு 30 வருடங்களுக்கு மேலாக உடன இருந்தார். அவரையே நம்புகிறேன். மற்றபடி திவாகரன், சுதாகரன்,பாஸ்கரன், தினகரன் உள்ளிட்டவர்களை நம்பவில்லை” என்று வெளிப்படையாக தெரிவித்தார்.

அதோடு, “கட்சியும் ஆட்சியும் சசி அத்தையிடம்  இருப்பதே சரி. அவர்தான் போயஸ் இல்லத்திலும் இருக்க வேண்டும்”  என்றார் தீபக்..

சசிகலாவைப்போலவே நடராஜன் மீதும் தீபக் மரியாதை வைத்திருக்கிறார்.

சரி, இவர் ஏன் திடீரென, “ கட்சியையும் ஆட்சியையும் நிர்வகிக்க ஓ.பி.எஸ்ஸுக்குத்தான் தகுதி உண்டு. தற்போது அதிமுக துணைப் பொதுச்செயலாளராக்கப்பட்டிருக்கும் டி.டி.வி.தினகரனுக்கு தகுதி இல்லை” என்று சொன்னார்?

இது குறித்து அதிமுக வட்டாரங்கள் தெரிவிப்பது இதுதான்:

சசிகலா, நடராஜன் இருவர் மீதும் நல்ல அபிமானம் கொண்டவர் தீபக். ஆனால், இளவரசியின் மகன் விவேக், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், சசிகலாவின் அக்காள் மகன்களான தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் மீது என்றைக்குமே அவருக்கு மரியாதை கிடையாது. காரணம், அவர்களது நடவடிக்கையே.

ஓ.பி.எஸ்ஸிடம் தினகரனும், டாக்டர் வெங்கடேசும் வலியுறுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினர் என்பது ஊரறிந்த ரகசியம். அதே போலத்தான், அவர்கள் சசிகலாவையும் நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்துப்போடச்சொல்லி, கட்சியில் சேர்ந்தார்கள் என்பது பலர் அறியாத ரகசியம். இப்போது இவர்கள் தான் கட்சியில் கோலோச்சுகிறாரா்கள்.

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனை  போயஸ் பக்கம் வரக்கூடாது என சொல்லிவிட்டனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் குடும்பத்தையும் ஒதுக்கவிட்டார்கள். இதனால் ஆத்திரமான திவாகரன், தனது மகன் ஜெய் ஆனந்துடன் கவர்னரை சந்தித்தார்.

இன்னொரு அதிர்ச்சிகரமான விசயம்,  சசிகலாவின் கணவர் நடராஜனையும் எவரும் மதிப்பதில்லை. அவர் மிகவும் அதிருப்தியில் இருக்கிறார். குறிப்பாக தினகரன், வெங்கடேஷ் ஆகியோரின் செயல்பாடுகள் அவருக்கு அறவே பிடிக்கவில்லை.

கடந்த  பிப் 20ம் தேதி, பெங்களூரு சிறையில் சசிகலாவை தீபக் சந்தித்தார்.  அப்போது சில முக்கியமான விசயங்களை தீபக்கிடம் சொல்லி அனுப்பியிருந்தார் நடராஜன். அதைக் கேட்ட சசிகலா, “சரியான முடிவுதான். ஆனால், தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் கேட்கணுமே” என்று தயங்கினார்.

இது தீபக்குக்கு ஏமாற்றத்தை அளித்தது. கூடவே, நடராஜனுக்கும்தான்.

அதன் பிறகே 23ம் தேதி தீபக், “கட்சியைவிட்டுச் சென்றவர்கள் சென்றவர்கள் திரும்ப வேண்டும்.  தலைமையேற்க ஓபிஎஸ்தான் தகுதியானவர்,  தினகரனுக்கு தகுதியில்லை” என்றெல்லாம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

ஆக தீபக் பேசியதின் பின்னணியில் நடராஜன் இருக்கிறார்!” – என்கின்ற அ.தி.மு.க. வட்டாரங்கள்.