சென்னை: தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம் என்று மார்தட்டி வந்த மதிமுக, தற்போது, 6 தொகுதிகளுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என்பது குறத்து வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
திமுக உடனான தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? என விளக்கம் அளித்தார்.
அப்போது, சட்டமன்ற தேர்தலில் குறைந்தது 12 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் பொதுவான சின்னம் கிடைக்கும். இல்லையென்றால் ஒவ்வொரு தொகுதி யிலும் ஒரு சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் ஏற்படும். இந்த நெருக்கடியான சூழ்நிலையைத் தவிர்க்கவே இந்த முடிவு எடுத்துள்ளோம் என்றவர், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள 12 நாட்களே உள்ளன. குறைந்த கால அளவில் தனிச்சின்னத்தை மக்களிடம் சேர்ப்பது நடைமுறை சாத்தியம் இல்லை அதனால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.
மேலும், மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வீர்களா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் தெரிவித்த வைகோ, சனாதன இந்துத்துவ சக்திகள் மூர்க்கத்தனமாகச் செயல்பட்டு, பெரியார், அண்ணாவின் திராவிட இயக்க பூமியில் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பில் ஈடுபட்டு சனாதனத்தைக் கொண்டு வர முயல்கின்றன அதை எதிர்த்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்.
திராவிட இயக்க பூமியில் பாஜகவின் ஏவல்களாக வருகின்ற சக்திகளை முறியடிக்க திமுகவுக்கு முழு ஆதரவு தருவோம். “கருணாநிதிக்கு பக்கபலமாக இருப்பேன் என்று அவரது கடைசிக் காலத்தில் கூறினேன். அந்த உறுதிமொழியைக் காப்பாற்றுவேன். மதிமுகவின் ஆற்றலைத் திமுகவுக்காக நாங்கள் பயன்படுத்துவோம் என்றார்.
திமுகவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறியதுடன், தமிழகத்திற்கு முதல்வராக வரக்கூடிய தகுதி கொண்ட தலைசிறந்த முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என புகழ்மாலை சூட்டினார்.