சென்னை

சென்னை விமான நிலையம் ஹஜ் பயணத்தில் ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஹஜ் பயணம் நிறுத்தப்பட்டது.  தற்போது உலகெங்கும் கொரோனா பரவல் குறைந்துள்ளது.  அத்துடன் ஏராளமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.  இதையொட்டி 2022 ஆம் ஆண்டுக்கான ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பிக்கலாம் என மத்டிய் அரசு ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

இதில் சென்னை விமான நிலையம் இடம்பெறாதது குறித்து மதிமுக பொதுச் செய்லர் வைகோ ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அதில்,

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஹஜ் புனிதப் பயணம் நடைபெறவில்லை.  2022ஆம் ஆண்டில் பயணம் மேற்கொள்ள விழைவோர், விண்ணப்பம் செய்வதற்கான இணையதளங்களை, மத்திய அரசின் ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

வழக்கமாக, இந்தியாவின் 20 விமான நிலையங்களில் இருந்து, ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொள்வர். ஆனால், அந்த எண்ணிக்கையைப் பத்தாகக் குறைத்து விட்டார்கள். சென்னை விமான நிலையத்தின் பெயர், பட்டியலில் இல்லை.

தமிழ்நாடு மட்டும் அல்லாது, புதுச்சேரி மற்றும் அந்தமான் முஸ்லிம்களும், சென்னை விமான நிலையத்தின் வழியாகவே ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் இனி, கேரளத்தின் கொச்சி அல்லது கர்நாடகத்தின் பெங்களூரு அல்லது ஹைதராபாத் சென்றுதான், ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

இது, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் பயணிகளுக்குப் பெருத்த அலைச்சலையும், கூடுதல் பொருட்செலவையும் ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, சென்னை விமான நிலையத்தையும் பட்டியலில் சேர்க்க ஆவன செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்”.

என வைகோ தெரிவித்துள்ளார்.