சென்னை

தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதை ஏன் தடை செய்யச் சட்டம் இயற்றக் கூடாது என  மத்திய அரசைச் சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

 

இந்தியாவில் நடைபெறும் மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் குற்றவியல் வழக்கு உள்ளவர்கள் போட்டியிடுவது தொடர்ந்து வருகிறது.  இந்த வகையில் அனைத்துக் கட்சியிலும் பல வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்களாக உள்ளனர். இவர்களில் பலர் தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகள் ஆகி விடுகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோரின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.  அப்போது அமர்வு, “குற்றப் பின்னணி உள்ள பலர் மக்கள் பிரதிநிதிகளாகி சட்டத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இது நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்று வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் அனைத்துக் கட்சித் தலைவர்களும் குற்றவாளிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகும்.  கடந்த 2019 ஆம் வருட மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 43% பேர் அதாவது 539 உறுப்பினர்களில் 233 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.  அது அட்டுமின்றி 159 உறுப்பினர்கள் மீது தீவிர கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

 எனவே மத்திய அரசு இது போலக் குற்றப்பின்னணி உள்ளவர்களை போட்டியிடாமல் தடுக்க தடை விதித்து ஒரு சட்டம் இயற்றலாம்.  ஆனால் இதுவரை எந்த ஒரு அரசும் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.  இந்திய குடியாண்மை குற்றவாளிகளால் மாசுபடக்கூடாது

அவ்வாறு இருக்க ஏன் குற்றவாளிகளை மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட தடை விதித்து மத்திய அரசு சட்டம் ஒன்றை இயற்றக் கூடாது?  இதற்கு மத்திய அரசு இன்னும் இரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.