கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளியாகி பட்டிதொட்டியெங்கும் நல்ல வரவேற்பை பெற்றதோடு இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ப்ரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

சமீபத்தில் நடைபெற்ற ஜப்பான் திரைப்பட விழாவுக்கு கார்த்தி-யை வைத்து இயக்கிய இயக்குனர்கள் பலரும் அழைக்கப்பட்ட நிலையில் அவரது முதல்படமான பருத்திவீரனை இயக்கிய அமீர் மட்டும் அழைக்கப்படவில்லை.

இதுகுறித்து அமீர் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிவரும் மாயவலை பட விழாவின் போது பேசிய இயக்குனர் அமீர், தனது முதல் படமான மௌனம் பேசியதே படத்தை நடிகர் சூர்யாவை வைத்து இயக்கியதாகவும் அதன்பின் பருத்திவீரனில் கார்த்தியை அறிமுகம் செய்ததாகவும் கூறியவர் தனக்கும் நடிகர் சிவக்குமார் குடும்பத்திற்கும் இருந்த நட்பை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கெடுத்துவிட்டார் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த ஞானவேல் ராஜா “பருத்திவீரன் படத்தை தயாரிக்க நினைத்து இயக்குனர் அமீருக்கு முதலில் பணம் கொடுத்த தனக்கு இதனால் 2 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறியதோடு அமீர் இந்தப் படத்தை நன்றாக இயக்குவாரா என்று கார்த்திக்கு சந்தேகம் எழுந்ததாகவும் அவரை நான் தான் நடிக்க அழைத்துவந்ததாகக் கூறி தன்னைப் பற்றி விமர்சிக்க அமீருக்கு தகுதியில்லை” என்று காட்டமாக கூறியிருந்தார்.

ஞானவேல் ராஜாவின் இந்த பதிலடியை அடுத்து இயக்குனர் அமீரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பருத்திவீரன் பட தயாரிப்பு விவகாரம் தொடர்பாக தனக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையிலான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தான் இதுகுறித்து அதிகம் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார் அமீர்.

மேலும், இந்தப் படத்தில் தன்னுடன் பணியாற்றியவர்கள் மற்றும் படத்தை எடுக்க தனக்கு உதவியாக இருந்தவர்கள் அன்றும் இன்றும் மௌனமாக இருப்பது ஏன் ? என்று தனக்கு புரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் இயக்குனர் அமீர் குறிப்பிட்டுள்ளார்.