கடந்த 10 நாட்களாக சென்னையில் உள்ள அ.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான மனுக்கள் பெறப்பட்டன.
மனு கொடுக்க கடைசி தினமான நேற்று விறு விறு திருப்பங்கள் நிகழ்ந்தன.
அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ,மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட மனு செய்தார்.
சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி கரூரில் போட்டியிட மனு செய்தார்.கூட்டணி விஷயத்தில் கட்சி மேலிடத்துடன் மோதிக்கொண்டிருக்கும் –தம்பிதுரை தற்போது கரூர் எம்.பி.யாக உள்ளார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக விருப்ப மனுக்கள் பெறப்பட்ட போது- 4,537 பேர் மனு செய்தனர்.ஜெயலலிதாவுக்காக மட்டும் 1,800 பேர் மனு கொடுத்தனர்.
ஆனால் இப்போது –மொத்தமாகவே 1,737 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளது தொண்டர்களை அதிற வைத்துள்ளது.
விருப்ப மனு வழங்க அ.தி.மு.க.வினர் ஏன் ஆர்வம் காட்ட வில்லை?
இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள்.
எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், எந்த தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை.வெற்றி பெற முடியாத நிலையில் ,வெட்டியாக ஏன் பணத்தையும், உழைப்பையும் செலவழிக்க வேண்டும் என்று கருதிய கட்சியினர் .போட்டியில் இருந்து விலகி விட்டனர்.
இன்னொரு காரணம் இது:
கூட்டணி கட்சிகளுக்கு அ.தி.மு.க. 16 தொகுதிகளை ஒதுக்குவது உறுதியாகி விட்டது. எனவே அ.தி.மு.க.23 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். தற்போது உள்ள எம்.பி.க்கள்-37. கையில் இருக்கும் தொகுதிகளோ-23.
தற்போதைய ‘சிட்டிங்’எம்.பி.களில் 14 பேருக்கு மீண்டும் டிக்கெட் கிடைக்காது.
அந்த தொகுதிகள் எது என்று தெரியாத நிலை ஒரு புறம் இருக்க-
‘’எம்.பி.களுக்கே டிக்கெட் இல்லையாம் . நமக்கு எங்கே ‘சீட்’ கிடைக்க போகிறது என்று கருதி பலர் ஒதுங்கி விட்டதாக தெரிகிறது.
–பாப்பாங்குளம் பாரதி