சென்னை:

றைந்த நடராஜனுக்கு அதிமுக சார்பில் ஏன் அஞ்சலி செலுத்தவில்லை என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம்.நடராஜன். இவர் புதிய பார்வை இதழின் ஆசிரியராக இருந்து வந்தார். அதிமுகவுக்கு மறைமுகமாக அனைத்துவிதமான உதவிகளையும் செய்து வந்தவர் என விமர்சிக்கப்பட்டவர்.

இந்நிலையில், உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் நேற்று முன்தினம் நள்ளிரவு மரணத்தை தழுவினார். அவரது உடல் நேற்று சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவும் 15 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ள நிலையில், நடராஜனின் உடலுக்கு கண்ணீர்  அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த நடராஜன் உடலுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவில் இருந்து ஒருவர்கூட அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அதிமுக சார்பில் நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்கள், அமைச்சர் ஜெயக்குமாரிடம்,  சசிகலாவை சின்னம்மா சின்னம்மா என்று அழைத்தீர்களே, அவரது கணவர் உடலுக்கு அதிமுக சார்பிலிருந்து ஒருவர் கூட இதற்கு இரங்கல் தெரிவிக்கவில்லையே என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், சசிகலா குடும்பத்தினருடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று முடிவெடுத்தபின் நடராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என கூறினார்.