டில்லி,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்கு கடந்த முறை ஒதுக்கிய தொப்பி சின்னத்தையே ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு  உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று முற்பகல் காரசாரமாக  நடைபெற்ற நிலையில், இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என டில்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக களமிறக்கும் டிடிவி தினகரன், தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், தொப்பி சின்னத்தை மேலும் இரண்டு சுயேட்சைகள் கேட்டிருப்பதாக கூறிய தேர்தல் அலுவலர், குலுக்கல் மு றையில்தான் ஒதுக்க முடியும் என்று கூறிவிட்டார்.

இதன் காரணமாக, டில்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் சார்பில் கடந்த 1ந்தேதி  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இறுதி விசாரணை இன்று முற்பகல் நடைபெற்றது. விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்த, உடனே தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

இன்றைய விசாரணையின்போது,  தேர்தல் கமிஷன் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், தினகரன் எந்த அரசியல் கட்சியும் இல்லை. அவர் சுயேட்சை வேட்பாளர் மட்டுமே. அதன் அடிப்படை யிலேயே அவருக்கு சின்னம் ஒதுக்கப்படும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, டிடிவி தரப்பு வழக்கறிஞர், கபில்சிபல், சின்னம் தொடர்பாக இன்றே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

அப்போது, அவரிடம், தினகரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கபில் சிபல், வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.

அப்போது முதல்வர் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு,  சின்னம் தொடர்பாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை தான் தினகரன் அணுக வேண்டும் என வாதம் செய்தார்.

மேலும், ஆர்.கே. நகரில் தொப்பி சின்னத்தை பலர் கேட்கும் பட்சத்தில் ஒருவருக்கு எப்படி ஒதுக்க முடியும் என்று வினவினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தொப்பி சின்னத்தை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியுமா? என எதிர் கேள்வி விடுத்தார்.

தொடர்ந்து விசாரணை  முடிவடைந்ததை தொடர்ந்த,  இன்று மாலை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.