சென்னை:

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக யாரை தேர்வு செய்யலாம் என்பது தொடர்பாக இன்று அதிமுக உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்துகிறது.

தமிழகத்தை சேர்ந்த 6 ராஜ்யசபா  உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் முடிவடைவதால், புதிய எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்  ஜூலை 18ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதற்கான வேட்புமனு 1ந்தேதி தொடங்கி உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய 8ந்தேதி (திங்கட்கிழமை)  கடைசி நாள்.  வேட்புமனு பரிசீலனை ஜூலை 9ம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் ஜூலை 11ந்தேதி என்றும் அறிவித்துள்ளனர்.

மேலும் ஜூலை 18ம் தேதி காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் அன்றைய தினம்   மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளுக்கு தலா 3 எம்.பி.க்கள் கிடைக்கும் என்பது உறுதியான நிலையில், திமுக சார்பில் போட்டியிடும்  ராஜ்யசபா வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் என்று இன்னம் உறுதி செய்யப்படாத நிலையில், வேட்பாளர்களை  இறுதி செய்ய ஓபிஎஸ்-ஈபிஎஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகின்றனர். இன்று காலை காலை 10.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வேட்பாளர்கள் யார் என்பதை இறுதி செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.