டில்லி
இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் தடுப்பூசி போடுவதை அதிகரித்து சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரமாக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவலில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். உலக அளவில் தினசரி பாதிப்பில் முதலாம் இடத்தில் உள்ள இந்தியா மொத்த கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதைப் போல் தெற்காசிய நாடுகள் அனைத்திலும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது மூன்றாம் அலை கொரோனா விரைவில் பரவலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா உள்ளிட்ட 20 தெற்காசிய நாடுகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் அலை கொரோனா பரவலில் இது மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே இந்த நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க வேண்டும். மூன்றாம் அலையில் டெல்டா கொரோனா வைரஸ் அதிகம் பரவக் கூடும்.
எனவே நாம் பரவலைக் கட்டுப்படுத்த பரிசோதனை, கண்டுபிடித்தல் மற்றும் தனிமைப்படுத்தலைத் தீவிரமாக்க வேண்டும். குறிப்பாக முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கை சுத்தம் ஆகியவை உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக்க வேண்டும். இந்த நடவடிக்கைஅக்ள் மூலமே நாம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.