
புதுடெல்லி: பயங்கரவாதி மசூத் அசாரை விடுதலை செய்து, பாகிஸ்தானுக்கு அனுப்பியது யார்? என்று நரேந்திர மோடியை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் ராகுல் காந்தி.
பாலகோட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களில் பேசிவரும் பிரதமர் நரேந்திர மோடியிடம், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்ததை வெற்றியாக கூறிக்கொள்ளும் அவரிடம், அந்த மசூத் அசாரை விடுதலை செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பியது யார்? என்ற கேள்வியைக் கேட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர்.
அவர் கூறியுள்ளதாவது, “பாரதீய ஜனதா தீவிரவாதிகளிடம் சமரசம் செய்துகொண்ட ஒரு கட்சி. ஆனால், காங்கிரஸ் ஒருபோதும் அப்படியான சமரசங்களை செய்துகொண்டதில்லை மற்றும் இனியும் அப்படி நிகழாது. நாங்கள் தீவிரவாதத்துடன் வியூகரீதியாக மோதுவோமே ஒழிய, பழிவாங்கும் உணர்ச்சியுடன் அல்ல.
நாங்கள் எந்த தீவிரவாதியையும் பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தீவிரவாதத்தை திடசித்தத்துடன் எதிர்கொள்வோம்” என்றார்.