நரேந்திர மோடி அரசின் மக்கள்விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டெல்லியில், விவசாயிகள் மகா பிரமாண்டப் போராட்டத்தை நடத்திவரும் நிலையில், தமிழ்நாட்டின் ‘மய்ய’ நடிகர், அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த ‘மய்ய’ நடிகர், தேவர் மகன், விருமாண்டி, தசாவதாரம், சபாஷ் நாயுடு உள்ளிட்ட பல திரைப்படங்களில், தனது ஜாதி வெறியை வெளிப்படுத்தியவர் என்று விமர்சிக்கப்படுபவர்.
தன்னைப் பெரியாரிஸ்ட் என்று ஒரு ஸ்டன்ட்டுக்காக முன்பொருமுறை கூறிக்கொண்டாலும், அனைத்து விஷயங்களிலும், தனது ஜாதியைச் சேர்ந்த சுப்ரமணிய பாரதியை(பெரியாரை தவிர்த்துவிட்டு) முன்னிறுத்தி வருபவர் என்ற ஆதாரப்பூர்வ மற்றும் வலுவான விமர்சனமும் இவர் மீது எப்போதும் உண்டு.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது, வாக்குகளைப் பிரிப்பதற்காக, தமிழகத்தில் களமிறக்கி விடப்பட்டவர், இன்றும் தனது பணியைத் தொடர்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி(கோட்சே) ஒரு இந்து’ என்ற கருத்தை இவர் முன்வைக்க, அது சர்ச்சையானது.
விபரம் புரியாமல், அடடே! என்ன ஒரு முற்போக்காளர் கமலஹாசன்..! என்கிற ரீதியில் சிலர் பாராட்டவும் செய்தனர். ஆனால், அவரின் அந்தக் கருத்து பாரதீய ஜனதாவுக்கு பல மாநிலங்களில் பெரிய வெற்றியைப் பெற உதவியது என்பதே உண்மை! அவர்களின் ஸ்கிரிப்டைத்தான் இவர் பேசினார் என்ற தெளிவான எண்ணமும் எழுந்தது.
தற்போது, இந்தியாவில், தான் இதற்குமுன்பாக பணியாற்றிய இடங்களிலெல்லாம் முறைகேட்டுப் புகார்களில் சிக்கி, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா மற்றும் தமிழகத்தின் சர்ச்சைக்குரிய ஆளுநரின் பேராதரவுடன் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பதவியேற்ற சூரப்பாவுக்கு, இவர் தெரிவிக்கும் வெளிப்படையான ஆதரவு, இவர் யார்? என்பதை இன்னும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
சூரப்பா, தனது தில்லுமுல்லுகளை அண்ணா பல்கலைக்கழகத்திலும் தொடர்கிறார் என்ற வலுவான குற்றச்சாட்டுகள் உண்டு. ஒரு மாநில அரசை எதிர்த்து, மிகவும் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறார் ஒரு துணைவேந்தர்! அவரின் அந்த துணிச்சலுக்கான பின்புலம் என்ன? என்பது யாவரும் அறிந்ததே!
அவர் மீது, மாநில அரசு அமைத்த விசாரணை கமிஷன் கூடாது என்று பல்கலைகளின் வேந்தரான ஆளுநரே வெளிப்படையாக குரல் கொடுக்கிறார். அவர் அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்டபோது, அவரைக் கொண்டாடியவர்கள் காவி முகாமைச் சேர்ந்தவர்களே! இப்போது, அவருக்காக வரிந்து கட்டிக்கொண்டு வருபவர்களும் காவி முகாமைச் சேர்ந்தவர்களே!
நாட்டில், விவசாயிகளின் போராட்டம் உக்கிரமடைந்துவரும் வேளையில், அது நாடெங்கிலும் பெரிய ஆதரவைப் பெற்றுவரும் நிலையில், இந்த மறைமுக காவி மனிதரான ‘மய்ய’ நடிகர், தனது உயர்ஜாதி முகாமைச் சேர்ந்த சூரப்பாவிற்கு இப்படியான வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்து, அவருக்கு முட்டுக்கொடுப்பதன் மூலம், எதை திசை திருப்ப முயல்கிறார்? அல்லது தன்னை ‘யார்’ என்று காட்ட முயல்கிறார்? என்ற விமர்சனங்கள் மீண்டும் வலுவாக எழுந்துள்ளன.
இதற்கு முன்பாக, உண்மையிலேயே நேர்மையான பல அதிகாரிகள் வேட்டையாடப்பட்டபோது, இந்த ‘மய்யம்’ எங்கிருந்தார்? என்று கேட்கின்றனர் பலர்.
மேலும், மாபெரும் அதிகாரப் பின்புலம் படைத்த சூரப்பாவிற்காக, இவர் எதற்காக ஓடோடிச் சென்று முட்டுக்கொடுக்க வேண்டும்? என்பதும் பெரிய சந்தேகமாக எழுந்து நிற்கிறது!