இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என பெயர் சூட்டியது உலக சுகாதார நிறுவனம்…

Must read

ஜெனிவா: இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு ‘டெல்டா’ என பெயர் சூட்டி உள்ளது உலக சுகாதார நிறுவனம்.

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்19, ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் உலக நாடுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதுடன், உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ளது.

இந்த வைரஸ், இடத்துக்கு தகுந்தபடி, நாடுகளின் சீதோஷ்ண நிலைக்கு தகுந்தவாறு தனது அமைப்பை மாற்றி, உருமாறிய நிலையில், மக்களை தாக்கி வருகிறது. உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கடுமையான உயிரிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்று உருமாறிய நிலையில் பரவும் வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு,  இந்தியா உள்பட  பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைக்கு பெயர்களை அறிவித்து உள்ளது.

அதன்படி, இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்  B.1.617 என்ற வகையையை சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார நிறுவனம், அதற்கு டெல்டா என பெயர் சூட்டியுள்ளது.

இந்த வைரஸ் இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் முதன்மதலாக  கண்டறியப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா ஆல்பா எனவும், தென் ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா பீட்டா  எனவும், பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா எனவும், அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இதற்கிடையே, வைரஸ்கள் அல்லது மாறுபாடு அடைந்த வைரஸ்கள் அவை கண்டறியப்பட்ட நாடுகளின் பெயர்களால் அடையாளம் காணப்படக் கூடாது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

More articles

Latest article