“காலா” படத்தைச் சுற்றி சர்ச்சைகள் வளையவருகின்றன. காவிரி பிரச்சினையில் கர்நாடகாவை எதிர்த்து ரஜினி கருத்து கூறியதால் அந்தத் திரைப்படத்தை அம்மாநிலத்தில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட வெறியர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்: “காலா கர்நாடகத்தில் வெளியாவதை கன்னடர்கள் விரும்பவில்லை” என்று அம்மாநில முதல்வர் குமாரப்பா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி கலவரத்துக்கு சமூகவிரோதிகளே காரணம் என்று ரஜினி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவிஸ், நார்வே நாடுகளில் காலா படத்தை திரையிடப்போவதில்லை என்று அந்நாடுகளின் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே காலா திரைப்படம் தங்களது தந்தையரை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று இருவர் பிரச்சினை கிளப்பியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் இருந்து மும்பை சென்று தமிழர்களைக் காத்த தாதா ஒருவரது கதைதான் காலா என்று அப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அது மும்பை தமிழ் நிழலுலக தாதா ஹாஜி மஸ்தானின் கதை எனவும் திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கு ஒரு பகுதி தமிழர்களின் தலைவராகத் திகழ்ந்த திரவிய நாடார் என்பவரின் கதை எனவும் பேச்சு கிளம்பியது.
உடனே ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனாகிய சுந்தர் சேகர் என்பவர் ரஜினிகாந்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். “என் வளர்ப்புத் தந்தை ஹாஜி மஸ்தான் அவர்களைத் தவறாக சித்தரித்து படமெடுத்தால், பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்றார்.
அதே போல திரவிய நாடாரின் மகன் ஜவஹர் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் அவர்களது வழக்கறிஞர் செய்யது இஜாஷ் அப்பாஸ் நக்வி, நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
அதில், காலா திரைப்படத்தில் ஜவஹர் நாடாரின் தந்தையான திரவியம் நாடார் தவறான கோணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவஹர் நாடாரின் குடும்பத்தினர் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதற்கு இழப்பீடாக 101 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
(இதற்கிடையே திரவியம் நாடாரின் மகள் விஜயலட்சுமி, “திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று தாதாவான ஒரே தமிழர் என் தந்தை தான். இது அவர் கதையாக இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்”, என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.)
இது தவிர, தமிழகத்தில் இருந்து மும்பை சென்று அங்குள்ள தமிழர்களுக்கு அரணாக இருந்த வரதராஜ முதலியார் கதை தான் காலா என்றும் ஒரு தகவல் உலவியது. ஏற்கெனவே இவரை மையமாக வைத்து கமல் நடித்த நாயகன் வெளியாகி பரபரப்பான வெற்றி பெற்றது.
ஆகவே, “நாயகன் கதையாக காலா இருக்க வாய்ப்பில்லை. நாயகனின் ஹீரோவான வரதராஜ முதலியாரின் வாழ்வில் சில சம்பவங்களை மட்டும் அடிப்படையாக வைத்து காலா எடுக்கப்பட்டிருக்கலாம்” என்று கூறப்பட்டது.
காலா படத்தைத் தயாரிக்கும் நடிகர் தனுஷ், தன் ‘வொண்டர்பார்’ நிறுவனத்தின் சார்பாக, ‘காலா மும்பையில் நடப்பதாக எழுதப்பட்ட ஒரு கற்பனை கதை. எந்த தனி மனிதரையும் குறிப்பிடுவதல்ல’ என்று அறிக்கை வெளியிடப்பட்டது.
ஹாஜி மஸ்தான் ஹைதர் மிர்சா, ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் 1926 ஆம் ஆண்டு பிறந்து கடலூரில் சிறிது காலம் வாழ்ந்து, பின் பிழைப்பு தேடி தன் தந்தையுடன் பம்பாய் சென்றார். சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்த அவர்களுக்கு வருமானம் போதவில்லை. ஆகவே மும்பை துறைமுகத்தில் கூலி வேலை செய்தனர். அப்போது கிடைத்த தொடர்புகளின் மூலம் சின்ன சின்ன கடத்தல் வேலையில் ஈடுபட்ட ஹாஜி மஸ்தான் ஆப்கானிஸ்தானிலிருந்து மும்பைக்கு புலம் பெயர்ந்த கரீம் லாலா என்பவருடன் இணைந்து பல “அதிரடி” வேலைகளைச் செய்து பெரும் பொருள் ஈட்டினார் என்று சொல்லப்பட்டது.
ஹாஜி மஸ்தான், 1984இல் ‘தலித் முஸ்லீம் சுரக்ஷா மகா சங்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தினார். ஆண் வாரிசு இல்லாததால், சுந்தர் சேகர் என்பவரை தன் தத்துப் பிள்ளையாக வளர்த்தார். அவர் தான் இப்பொழுது ரஜினிக்கு நோட்டீஸ் விட்டவர். ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையைத் தழுவி, இந்தியில் ‘தீவார்’ (Deewar) , ‘ஒன்ஸ் அபான் அ டைம் இன் மும்பை’ (Once upon a time in Mumbai) ஆகிய படங்கள் வெளியானது.
திரவிய நாடாரை பொறுத்தவரை சிறிய வயதில் வறுமையினால் திருநெல்வேலியில் இருந்து மும்பாய் சென்றார். ஆரம்பத்தில் சின்னச் சின்ன சட்டவிரோத செயல்கள் செய்த இவர் பிறகு காலியாக இருக்கும் இடங்களை வளைத்து கட்டிடங்கள் கட்டி வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.
வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தார், திரவிய நாடார் மூவருக்குமே அதிரவைக்கும் பின்னணி இருப்பதாக கூறப்பட்டாலும் மும்பை வாழ் தமிழர்களுக்கு மூவருமே பல்வேறு உதவிகளை செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் காலா, யாருடைய கதையைச் சொல்கிறது என்பது தற்போது பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இந்த மூவரில் யாருடைய கதை அல்லது முழுக்க கற்பனைக் கதையா என்பது படம் வந்த பிறகுதான் தெரியும்.