சென்னை:
டந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் சட்டமன்ற  காங்கிரஸ் கட்சி தலைவர் யார் என்கிற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 40 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது.  நாங்குநேரி தொகுதியில் வசந்தகுமார், குளச்சல் தொகுதியில் பிரின்ஸ், விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி, கிள்ளியூர் தொகுதியில் ராஜேஷ் குமார், ஊட்டியில் கணேஷ், தாராபுரம் தனித் தொகுதியில் காளிமுத்து, முதுகுளத்தூர் தொகுதியில் பாண்டி, காரைக்குடி தொகுதியில் கே.ஆர்.ராமசாமி அம்பலம் ஆகிய எட்டு பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கே.ஆர். ராமசாமி, விஜயதரணி, ஹெச். வசந்தகுமார், பிரின்ஸ் ஆகியோரிடையே இந்த பதவிக்காக கடும் போட்டி எழுந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கே.ஆர். ராமசாமி பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கரியமாணிக்கம் அம்பலம், பழைய ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப் பிரபலமான காங்கிரஸ் தலைவராக விளங்கியவர். அவர் திருவாடானை தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர்.
assembly_2560621h
இவரது மகனான. கே.ஆர். ராமசாமி 5 முறை திருவாடானை தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். காங்கிரஸின் கோட்டையாக திகழ்ந்த திருவாடானையை 2011 தேர்தலில் திமுக கைப்பற்றியது. இந்த தேர்தலில் அதிமுக கைப்பற்றி விட்டது.
கடந்த 2011 தேர்தலிலேயே காரைக்குடிக்கு மாறி விட்ட  ராமசாமி. அத்தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.  ஆனால் இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கற்பகம் இளங்கோவை வீழ்த்தி எம்.எல்.ஏவாகி விட்டார்.
மூத்த தலைவர் என்ற முறையிலும், பலமுறை எம்.எல்.ஏவாக இருந்திருக்கிறார் என்கிற முறயிலும் இவருக்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பொறுப்பு கிடைக்கலாம்.
அதே நேரம், கடந்த சட்டமன்றத்தில் காங்கிரஸ் கொறடாவாக செயல்பட்ட விஜயதரணியும் தலைவர் பதவிக்கு முயற்சிக்கிறார்.  இவர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
மேலும் ஹெச். வசந்தகுமார், பிரின்ஸ் ஆகியோரும் தலைவர பதவியை விரும்புகிறார்கள். இவர்களில் யாருக்கு பதவி கிடைக்கும் என்பது விரைவில் தெரியும்.
இந்த நிலையில் சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடக்கிறது. இதில் காங்கிரஸ் மேலிட பிரதிநிதியும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரியுமான ஷீலா தீட்சித், கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகில் வாஸ்னிக் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இதற்காக சென்னை வந்த முகில் வாஸ்னிக்  பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற தலைவரை தேர்ந்தெடுக்க என்னையும், டெல்லி முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்து உள்ளார். முதலில் நாங்கள் பாண்டிச்சேரி செல்கிறோம்.
பின்னர் சென்னை வந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசி தலைவரை தேர்வு செய்வோம். 3 மாநில எம்.எல்.ஏ.க்களை சந்திக்க உள்ளோம். எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசி தலைவரை தேர்வு செய்வோம். காங்கிரஸ் கட்சியின் வெற்றி-தோல்வி குறித்தும் ஆராய்ந்து அதன்படி நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.
இதற்கிடையே பாண்டிச்சேரி மாநில முதல்வராக நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.