ஜெயா டிவி, நமது எம்.ஜி.ஆர் உரிமையாளர் யார்?

Must read

அ.தி.மு.க.வில் நிலவும் கடுமையான குழப்பத்தில் இப்போது அதிகம் அடிபடும் பெயர்.. நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி. ஆகியவைதான்.

அதிமுக அதிகாரபூர்வ தொலைக்காட்சியான ஜெயா டிவி. நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்களை மீட்போம் என்று எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பு தீர்மானம் நிறைவேற்றி சூட்டைக் கிளப்பியிருக்கிறது.  இதற்கு தினகரன் தரப்பு, “இவை தனியார் சொத்துக்கள். முடிந்தால் கைப்பற்றிப்பார்” என்று கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஜெயா தொலைக்காட்சியை இப்போது நிர்வகித்து வரும் விவேக் ஜெயராமனும், “ஜெயா டிவி என்பது தனியார் தொலைக்காட்சி. இதை யாரும் கைப்பற்ற முடியாது. முதல்வர் எடப்பாடியின் தீர்மானம் ஊடகச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது சரியான தகவலே.

இதே போல அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடு என்று கூறப்படும் நமது எம்.ஜி.ஆர் நாளேடும் தனியாருக்குச் சொந்தமானதுதான். அந்த தனியார்… வி.கே. சசிகலாதான்.

ஆம்.. அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு என்றாலும் இது அ.தி.மு.க. அல்லது அது சார்ந்த அறக்கட்டளை மூலம் நடைபெறவில்லை. சசிகலாவுக்குச் சொந்தமான தனியார் பத்திரிகையாக நடத்தப்படுகிறது. (ஜெயா பப்ளிகேசன்ஸ்.)

அதாவது ‘நமது எம்.ஜி.ஆர்’  எனும் தனியார் நாளிதழ், அ.தி.மு.க. எனும் கட்சியை ஆதரிக்கிறது.

ஆகவேதான் டி.டி.வி.தினகரன் தரப்பினர்.. குறிப்பாக  விவேக் ஜெயராமன், “எப்படி கொடநாடு, சிறுதாவூர் பங்களாக்கள் தனியாருக்குச் சொந்தமானதோ அப்படியே நமது எம்.ஜி.ஆர் நாளிதழும் ஜெயா டிவியும் தனியாரான சசிகலாவுக்குச் சொந்தமானதுதான்” என்கிறார்கள்.

ஜெயா டிவி ஆரம்பிக்கப்பட்டதன் காரணம் என்ன?

தமிழில் முதன் முறையாக ஒளிபரப்பான தனியார் தொலைக்காட்சியான சன் டிவி, திமுக பின்புலத்தில் உருவானது என்பது அனைவரும் அறிந்த விசயம். அத்தொலைக்காட்சி திமுகவை ஆதரித்து  செய்திகளை ஒளிபரப்பி வரவே… அ.தி.மு.க.வுக்கு என்று தனி டிவி சானல் வேண்டும் என  ஜெயலலிதா விரும்பினார்.

அந்த விருப்பத்தை ஏற்று போயஸ் கார்டனில் அவரோடு இருந்த சசிகலா ஜே.ஜே. டிவியை துவங்கினார்.சென்னை அபிபுல்லா சாலையில் அந்த டிவியின் அலுவலகம் இருந்தது. சசிகலாவின் உறவினர்களே அங்கு ஆதிக்கம் செலுத்தினர். இன்த ஜே. ஜே டிவி உபகரணங்களை இறக்குமதி செய்ததில் அந்நியசெல்வாணி மோசடி  செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு விவகார்ததில் சிக்கியதால் ஜெ. ஜெ. டிவிக்கு பதிலாக ஜெயா டிவி உருவானது.

இதன் உரிமையாளரும் சசிகலாதான்.

பிறகு   Mavis Satcom Limited என்ற நிறுவனத்தின் பெயரில் இயக்குநர்களாக மருதப்பன் பழனிவேலு உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.   நிறுவனங்கள் சட்டத்தின்படி 18/11/1998 அன்று இன்கார்ப்போரேட் செய்யப்பட்டுள்ளது.  சசிகலாவை உரிமையாளராகக் கொண்ட இந்த நிறுவனத்திற்கு சொந்தமானதுதான்  ஜெயா  டிவி.

ஜெயா டிவிக்கு இயக்குநர்களாக இருப்பவர்களும் சசிகலா உறவினர்களே. அதன் ஒரு இயக்குநர் டாக்டர் சிவக்குமார் என்பவர்.  சில மாதங்கள் முன்பு வரை ஜெயா டிவி நிர்வாகத்தை கவனித்து வந்த  தினகரன் மனைவி அனுராதா.  இப்போது இயக்குநராக இளவரசி மகன் விவேக் ஜெயா டிவி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இவர்கள் எல்லோரும் சசிகலாவின் உறவினர்கள் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

 

குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால்.. ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் அதிமுகவுக்கும் சட்ட ரீதியாக ஒரு தொடர்பும் கிடையாது. அதே போல நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கும் அதிமுகவுக்கும் சட்ட ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை.

இவற்றை நடத்துவது சசிகலா அண்ட் குடும்பத்தினர்தான். அங்கு பணிபுரிவோருக்கு ஊதியம் அளிப்பதும், நிர்வாகத்தை நடத்துவதும் இவர்களே.

ஆகவே நமது எம்.ஜி.ஆர் நாளிதழையோ, ஜெயா தொலைக்காட்சியையோ கைப்பற்ற முடியாது என்பதே சட்ட ரீதியான பார்வை.

 

 

More articles

Latest article