டில்லி,

திமுகவில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட பரபரப்பான சூழலில், செப்டம்பர் மாதம் 2ந்தேதி அதிமுக பொதுக்குழு செயற்குழு கூடுவதாக அதிமுக அம்மா, புரட்சித்தலைவி அம்மா அணியினர்  அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள  அதிமுகவின் பெயரையும், முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தையும் மீட்க, தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க டில்லியில் முகாமிட்டுள்ளனர்.

இதற்காக தேர்தல் ஆணையரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கின்றனர். இதற்கிடையில் இன்று காலை 11 மணிக்கு, திடீரென டிடிவி அணியினர் தேர்தல்ஆணையம் சென்று, பொதுச்செயலாளர், இரட்டை இலை, பிரம்மான பத்திரம் விவகாரத்தில் தங்களது கருத்தை கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என மனு கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக, டில்லியில் முகாமிட்டுள்ள தமிழக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கடும்  அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து  தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி உடன் மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்,  டிடிவி தினகரன் மனு குறித்தும், பிரம்மாண பத்திரத்தை வாபஸ் பெற்று, இரட்டை இலை சின்னத்தை மீட்பு குறித்தும், இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை திரும்பப்பெறுவது தொடர்பாகவும்  ஆலோசனை நடைபெற்றுவருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.