சென்னை:

மிழக அரசின் புதிய தலைமை செயலாளராக தற்போதைய நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தலைமை செயலாளர் பதவிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலாலின் செயலாளராக உள்ள ராஜகோபால் தலைமை செயலாளர் பதவியை கைப்பற்ற முயற்சிப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் பரவி வருகின்றன.

இன்று மதியம், தமிழக அமைச்சர் ஜெயக்குமார், கவர்னரை திடீரென சந்தித்து பேசி வந்த நிலையில், தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது தலைமை செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெறுவதை தொடர்ந்து அவருக்கு பதில புதிய தலைமை செயலாளர் தேர்வு சூடுபிடித்து வருகிறது. தலைமை செயலாளர் பதவிக்கு சீனியாரிட்டி அடிப்படையில் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, ராஜீவ் ரஞ்சன், வணிகவரித் துறை செயலாளர் சோமநாதன் ஆகியோர் உள்ள நிலையில், நிதித்துறை செயலாளர் சண்முகத்துக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய தலைமைச் செயலர் சண்முகம். முதல்வரின் செயலாளர் செந்தில்குமார், நிதித் துறை செயலாளராகவும் அறிவிக்கப்படுவார்கள் என தகவல்கள் பரவிய நிலையில், தற்போது தலைமை செயலாளர் பதவிக்கு கவர்னரின் செயலாளர் ராஜகோபாலை நியமிக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ராஜ்பவன் வட்டார உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகஅரசை கண்காணிக்கும் வகையில் மத்தியஅரசுக்கு வேண்டியரான கவர்னரின் செயலாளர் ராஜகோபாலை நியமிக்க மத்திய அரசு விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல, தமிழக டிஜிபியாக திரிபாதி நியமிக்கப்படலாம் என்றும், தற்போதைய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு தமிழக அரசு பாதுகாப்பு ஆலோசகர் என்ற புதிய பதவி வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான அறிவிப்பு இன்று இரவு அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.