சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திலும் நயினாருக்கே அதிக அளவிலான ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு, அங்கு சென்று விட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவி காலியாக உள்ளது. பதவியை பிடிக்க தமிழக பாஜகவினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
பாஜக நிர்வாகிகள் .ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், எஸ்.வி.சேகர், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன் உள்பட பலர் போட்டியில் உள்ள நிலையில், அதிமுகவில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரனும் குதித்துள்ளதாக கூறப்படுகிறது.
தென்மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள ஆதரவைப்போல பாரதிய ஜனதா கட்சிக்கும் குறிப்பிட்ட அளவு ஆதரவு உள்ளது. இதன் காரணமாக தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக நியமிக்க பாஜக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொதுமக்களிடையே பிரபலமானவரும், நிதி வசதியிலும் நயினார் நாகேந்திரன் வலிமையாக இருப்பதால், அவரை தமிழக பாஜக தலைவராக பரிந்துரைத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து தமிழக பா.ஜனதா தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட இருப்பதாக கட்சியின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவரை முன்னாள் தலைவர் தமிழிசையும் பரிந்துரை செய்திருந்ததாக கூறப்படுகிறது.
தற்போதைய தகவலின்படி, நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜனதா தலைவராக நியமிக்கப்படுவது உறுதி என்றும், இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது..