இந்த தேர்தலில்’’கிங் மேக்கர்’’ யார்? 110 தொகுதிகளை அள்ளும் 4 தலைவர்கள் கையில்

 நாட்டின் தலையெழுத்து  …

ந்திய வரை படத்தில் நாட்டின் பெரிய மாநிலங்கள் எது எதுவென நோட்டமிட்டு குறிப்பெழுதிய போது-

தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் ,தங்கள் கூட்டணியை இறுதி செய்திருப்பதை பார்க்க முடிந்தது.

பெரும்பாலான தேர்தல்களில் பிரதமர் நாற்காலியில் அமர்வதற்கான ஆளை அனுப்பி வைத்துள்ள உ.பி.மாநிலத்தில் உதிரி கட்சிகளை தோளில் சுமந்து கொண்டு கோதாவில் குதித்துள்ளது- பா.ஜ.க.

அகிலேஷ் யாதவ்,மாயாவதி, அஜீத்சிங் ஆகியோர் மற்றொரு அணி.தனித்து நிற்கிறது காங்கிரஸ்.

பீகாரில் இரண்டு அணிகள்.மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்வியால் பதற்றத்தில் இருக்கும் பா.ஜ.க. அங்கு  இட பங்கீட்டையே முடித்து விட்டது. நீதிஷ்குமரின் ஐக்கிய ஜனதாதள மும், பா.ஜ.க.வும் ஆளுக்கு தலா  17 தொகுதிகளை எடுத்துக்கொண்டு மிச்சமுள்ள 6 இடங்களை ராம்விலாஸ் பஸ்வான் கட்சிக்கு கொடுத்து விட்டது.

மகராஷ்டிராவில் சிவசேனாவுடன் முட்டல்- மோதல் இருந்தாலும் அங்கே பா.ஜ.க.வுக்கு வேறு நண்பர்கள் இல்லை.காங்கிரசுடன் , சரத்பவார் சேர்ந்துள்ளார்.

பஞ்சாபில் நீண்டநாள் தோழமை கட்சியான அகாலிதளத்துடன் பா.ஜ.க.நட்பை தொடர –தனியாக நிற்கிறது காங்கிரஸ்.

டெல்லியில் காங்கிரஸ்,பா.ஜ.க.,ஆம் ஆத்மி என மும்முனை போட்டி.

மேற்கு வங்காள மாநிலத்தில் திரினாமூல் காங்கிரஸ், பா.ஜ.க.,காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் என் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

ஆந்திராவில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் ,காங்கிரஸ் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய நான்கு அணிகள். 

தெலுங்கானாவிலும் பெயரளவுக்கு  நான்கு முனை போட்டி என்றாலும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும் ,காங்கிரசுக்கும் இடையேதான் பிரதான போட்டி.

இங்கே விட்டுப்போன சில சிறிய மாநிலங்களிலும்  கூட்டணிகள் முடிவாகி உள்ள நிலையில், அண்மையில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று அந்த கணிப்பு –மக்கள் எண்ண ஓட்டத்தை பிரதி பலிக்கிறது.

கடந்த தேர்தலில் 336 இடங்களை பிடித்த பா.ஜ.க.கூட்டணிக்கு ,இப்போது 252 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

கடந்த முறை 60 தொகுதிகளோடு சுருண்ட காங்கிரஸ் கூட்டணி ,இப்போது 146 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி,மற்றும் அகிலேஷ் ,மாயாவதி,மம்தா ஆகிய நால்வரது கட்சிகள் 110 இடங்களை பிடிக்கும் என்று அந்த கருத்து கணிப்பு கூறுகிறது.

எனவே இவர்களே –வரும் தேர்தலில் ‘கிங் மேக்கர்’களாக இருப்பார்கள்.

பிரியங்காவின் அரசியல் பிரவேசம் ஏதேனும் அதிசயத்தை விளைவித்தால் மட்டுமே இந்த நிலையில்  மாற்றம் ஏற்படக்கூடும்.

–பாப்பாங்குளம் பாரதி