மதுவிடுதியில் பாட்டிலை தேடும் “மர்ம” நபர்

லகியே காஸ்ட்லியான குடிகாரர் என்ற “பெருமையை” பெற்றிருக்கிறார் ஒரு மர்ம நபர்.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் உள்ளது புகழ் பெற்ற ‘கேஃப் 33’ மது விடுதி.  கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை ஒட்டி, பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனத்திலிருந்து வாடகைக்கு  ஒரு மதுபாட்டிலை வாங்கி காட்சிக்கு வைத்தது.

அது சாதாரண மது பாட்டில் அல்ல.  தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்த மது பாட்டில் அது. மூடியோ  வைரத்தால் ஆனது.

இதன் மதிப்பு, 1.3 மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் ரூ.8.23 கோடி!

இந்த பாட்டிலில்   “ரஸ்ஸோ-பால்டிக்” என்ற உயர் ரக ஓட்காவை நிரப்பி காட்சிக்கு வைத்திருந்தது மது விடுதி நிர்வாகம்.

இந்த நிலையில் திடீரென அந்த மது பாட்டிலை காணவில்லை. நள்ளிரவு மதுவிடுதி மூடப்பட்டதும் உள்ளே நுழைந்த மர்ம நபர் அந்த பாட்டிலை திருடிச் சென்றுவிட்டார். இது சிசி டிவி கேமராவிலும் பதிவானது.

ரூ.8.23 கோடி மதிப்புள்ள மது பாட்டில்

மதுவிடுதி நிர்வாகத்தன் அதிர்ந்து போய்விட்டார்கள்.  எட்டு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு என்றால் சும்மாவா?

மதுவிடுதியே அல்லோலகல்லோலப்பட்டது. காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நகரில் மிகப்பெரிய கட்டிடம் கட்டப்பட்டு வந்த பகுதியில் அநாமத்தாக கிடந்தது   அந்த பாட்டில். அங்கு கட்டிட வேலை பார்த்துவந்த ஒருவர், இந்த பாட்டிலை கண்டெடுத்து காவல்துறை வசம் ஒப்படைத்தார்.

நிம்மதி பெருமூச்சுவிட்டது மதுவிடுதி நிர்வாகம்.

இதில் குறிப்பிட வேண்டிய விசயம்… அந்த மது பாட்டிலை திருடிச் சென்ற நபர், அதில் இருந்த  ஓட்காவை மட்டும் குடித்திருக்கிறார். பாட்டிலை விசிறிச் சென்றிருக்கிறார்.

பலகோடி ரூபாய் மதிப்புள்ள பொருள் வேண்டாம்.. மதுதான் வேண்டும் என்று நினைத்த அந்த மர்மத் திருடர் உலகிலேயே காஸ்ட்லி குடிகாரர்தானே!

இப்போது அந்த காஸ்ட்லி குடிகாரரை வலைவீசித் தேடிவருகிறது டென்மார்க் காவல்துறை.