சென்னை:  ஆளும்கட்சிக்குள் நிலவி வரும் அதிகார மோதல் காரணமாக, இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவில், துணைமுதல்வருக்கும், முதல்வருக்கும் இடையே காரசாரமான நேரடி வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், திமுக உள்பட அரசியல் கட்சிகள், தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளன. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளின் ஆளுமைகளாக விளங்கிய கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது.

திமுக மற்றும் அதன் கூட்டணிகள் சார்பில், அடுத்த முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தொடங்கியுள்ளன.  ஆனால், ஆளும்கட்சியான அதிமுகவில் அதிகார மோதல் காரணமாக, தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு , பிறகு பிரதமர் மோடியின் தயவில் அதிமுகவையும், மாநில அரசையும்  இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டணியாக  நடத்தி வருகின்றனர். இருந்தாலும், அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இதுதொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே மோதல் எழுந்த நிலையில், செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என அதிமுக தலைமை அறிவித்து, தற்காலிக சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது.  இந்த  பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், செயற்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதலில்   15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து கட்சியின் நிலவரம், வளர்ச்சி பணிகள், சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சில மூத்த உறுப்பினர்கள்,  அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து  இன்று முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.  அதுபோல ஓபிஎஸ் தரப்பில், ஏற்கனவே இரு தரப்பினரும் இணைந்தபோது, கூறப்பட்ட,  11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும், அந்த  வழிகாட்டுதல் குழுவே முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என  வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காரசாரமாக வாக்குவாதங்கள் நடைபெற்று வந்தன. இதற்கிடையில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா, உங்களை முதல்வர் ஆக்கியது சசிகலா ஓபிஎஸ் காட்டமாக கூறியதால் வாக்குவாதம் மேலும் தீவிரம் அடைந்ததாகவும்,

ஒபிஎஸ்-க்கு பதிலடி தரும் வகையில், முதல்வர் இபிஎஸ்,  இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான், தற்போதைய கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் தான்  சிறப்பாக செயல்பட்டு வருகிறேன் என்று பதிலுரைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதற்கு பதில் கூறிய  ஓபிஎஸ், தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன் என்றும், தான்  முதல்வராக சிறப்பாக செயல்பட்டுள்ளதை பிரதமரே பாராட்டியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டியதுடன்,  தன்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா என்றும், ஆனால்,  எடப்பாடி பழனிசாமியை சசிகலா தான் என்று கூறினார்.

ஆனால், அதற்கு பதில் தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி,   என்னை மட்டுமல்ல, ஓ.பன்னீர்செல்வத்தையும் முதல்வராக்கியது சசிகலா தான் என பதிலுரைக்க  அதிமுக செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இருவரையும் மூத்த நிர்வாகிகள் சிலர் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுமார் 5 மணி நேரமாக நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் கூட்டம் முடிவடைந்தது.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 7 ஆம் தேதி ஓ.பி.எஸ். இ.பிஎஸ் கூட்டாக அறிவிப்பார்கள் என கூறினார்.

போகிற போக்கைப்போர்த்தால் உதயநிதி ஸ்டாலின் கூறியது உண்மையாகி விடுமோ?….

மேலும் அதிமுக குறித்த அரசியல் செய்திக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..

அதிமுக தலைமைக்குள் குழப்பத்தை எற்படுத்தி, இரட்டை இலை முடக்கி, தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள பாஜக தலைமை செய்யும் தந்திரத்துக்கு ஓபிஎஸ் பலிகடா ஆவாரா?