டில்லி:
ஜனாதிபதி தேர்தலின் வாக்குப்பதிவு இன்று எண்ணப்படுகிறது. அதையொட்டி நாட்டின் புதிய ஜனாதிபதி யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.
14-வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 17ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று எண்ணப்படுகிறது. இன்று காலை 11 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு இன்று மாலை முடிவுகள் வெளியிடப்பட இருக்கிறது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக மக்களவை முன்னாள் தலைவர் மீராகுமார் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 776 பேர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,120 பேர் வாக்களித்தனர். சுமார் 99% வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணிக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு மாலை 5 மணிக்குள் முடிவுகள் தெரிந்து விடும் என கூறப்படுகிறது.
சுமார் 8 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை 4 தனித்தனி மேஜைகளில் வைத்து எண்ணப்பட உள்ளன.
அன்றைய தினம் மாலை 5 மணிக்குள், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்பது தெரிந்துவிடும்.