டில்லி

மாஜ்வாதி கட்சித்தலைவர் முலாயம்சிங் யாதவ் நேற்று தனது பாராளுமன்ற உரையில் பாகிஸ்தானில் இந்தியாவைத் தாக்க அணுகுண்டுகளை சீனா புதைத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

நேற்று ராஜ்யசபாவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் உரையாற்றினார்.  அதில் தெரிவித்ததாவது :

“நமது மிகப்பெரிய எதிர் சீனாதான்.  இதுவரை அரசு சீனாவைக் கட்டுப்படுத்த என்ன செய்தது எனத் தெரியவில்லை.  காஷ்மீரில் பாகிஸ்தானுடன் சீனா கைகோத்துள்ளது. பல வருடங்களாக இது பற்றி நான் மத்திய அரசை எச்சரித்தும் ஒன்றும் நடைபெறவில்லை.  இரண்டு நாடுகளும் சேர்ந்து இந்தியாவை தாக்க திட்டம் தீட்டுகின்றன.

எனக்கு கிடைத்த தகவலின்படி பாகிஸ்தானில் ஒரு பகுதியில் சீனா தனது அணுஆயுதங்களை புதைத்து வைத்துள்ளது.  அந்த ஆயுதங்கள் அங்கு புதைக்கப் பட்டது இந்தியாவின் மேல் அணுஆயுத தாக்குதல் நடத்தவே என அந்த தகவல் கூறுகின்றது.  இது பற்றி என்னை விட இந்திய உளவுத்துறை நன்கு அறிந்திருக்கும்.

சிக்கிம், பூட்டான் ஆகியவற்றை ஆக்ரமிக்க சீனா திட்டம் இடுகிறது.  திபெத் சீனாவை சேர்ந்தது என இந்தியா முன்னர் அறிவித்தது மாபெரும் தவறு,  மோடியின் அரசு தற்போதாவது, பூட்டான், சிக்கிம், மற்றும் திபெத ஆகிய பிரதேசங்களை காக்கும் என நம்புகிறேன்” என கூறி உள்ளார்.