சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாதற்கு திமுகவே காரணம் என்று சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நேற்று முன்தினம்  (4-4-2018)  மாலைமலர் இதழில், ‘உள்ளாட்சி இல்லாததால் அரங்கேறும் அவலங்கள்’ கட்டுரையில் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உண்மைக்கு மாறான பல தகவல்கள் கொடுத்திருக்கிறார். அவருக்குப் பிறகு சென்னை மாநகர மேயர் பொறுப்புக்கு வந்தவன் என்ற முறையில், அவற்றுக்கு விளக்கம் கொடுக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தபோது சுமார் 450 பூங்காக்கள் உருவாக்கியதாக உலக மகா பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார். அவருக்குப் பிறகு நான் 2011-ம் ஆண்டு மேயர் பதவிக்கு வந்தபோது சென்னையில் மொத்தமே 260 பூங்காக்கள் மட்டுமே இருந்தன. அப்படியிருக்கும்போது அவர் எப்படி 450 பூங்காக்கள் உருவாக்கியிருக்க முடியும்?

சென்னை மாநகராட்சியில் 1919-ம் ஆண்டு முதல்  2011 வரை 260 பூங்காக்கள் மட்டுமே இருந்தன. என்னுடைய மேயர் காலத்தில் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 300 புதிய பூங்காக்கள் உருவாக்க திட்டமிடப்பட்டது. அதாவது 90 ஆண்டுகளாக சென்னையில் உருவாக்கப்பட்டிருந்த 260 பூங்காக்களைவிட கூடுதலாக 40 பூங்காக்கள் என 300 புதிய பூங்காக்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. என் பதவிக்காலம் முடிவடையும்போது 266 புதிய பூங்கா பணி நிறைவடைந்து மொத்தம் சென்னையில் 526 பூங்காக்கள் இருந்தன. மீதமுள்ள பூங்கா பணிகளும் தற்போது நிறைவடைந்து வருகின்றன.

அவர் எழுதிய, ‘மேயர் அல்ல பொறுப்பு’ என்ற புத்தகத்தில்கூட, ,சென்னையில் சுமார் 236 பூங்காக்கள் இருந்தன என்றும் கூவம் கரையோரம் இரண்டு புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன என்றும் சீரமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிய 58 பூங்காக்கள் திறக்கப்பட்டன என்று மட்டுமே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் புதிதாக 450 பூங்காக்கள் உருவாக்கியதாக எங்கும் பதிவு செய்யவில்லை. உண்மை இப்படி இருக்கும்போது, 450 பூங்காக்கள் உருவாக்கியதாக தவறான தகவல் சொல்வது வரலாற்றுப் பிழை. ஆகவே மா.சுப்பிரமணியன் இதற்கான ஆதாரங்களையும் ஆவணங்களையும் உடனடியாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோன்று, திமுக காலத்தில் மீட்டெடுத்த 4 ஆயிரம் கோடி மதிப்ப்ள்ள திறந்தவெளி நிலங்கள் அதிமுக காலத்தில் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டது என்று வடிகட்டிய பொய்யை கூறியுள்ளார். மாநகராட்சி பெயரில் உள்ள சொத்துக்களை யாரும் தாரை வார்க்க முடியாது, யாரும் சொந்தம் கொண்டாடவும் முடியாது. மாநகராட்சியின் நிதிச்சுமையைக் குறைப்பதற்காக  அரசு மற்றும் மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு கடுமை யான நிபந்தனைகளுடன் ஹோட்டல், வங்கி, மருத்துவமனை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பராமரிப்பு பணிகள் செய்வதற்கு மட்டுமே பூங்காக்கள் ஒப்படைக்கப்பட்டன. இது எப்படி தாரை வார்ப்பதாகும்?

நான் மேயராக இருந்த வரை, மாநகராட்சி சொத்துக்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டன,  சொத்து வருவாயில் இருந்த முறைகேடுகள் களையப்பட்டு மாநகராட்சியில் இருந்த அனைத்து ஓட்டைகளையும் அடைத்து நேர்மையான தூய்மையான நிர்வாகம் கொடுத்தேன்.

என்னுடைய காலத்தில் பூங்காக்கள் அனைத்தும் மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டன என்பதற்கு சென்னை மாநகர மக்கள், பொதுநலச் சங்கங்கள் மற்றும் அங்கு நடைப்பயிற்சி செய்தவர்களுமே சாட்சி. இன்றும்கூட தனியார் நிறுவனங்களின் பராமரிப்பில் இருக்கும் பூங்காக்கள் நல்லபடியாகவே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை என்று வருத்தப்படும் மா.சுப்பிரமணியன், இந்த தேர்தல் நடைபெறாமல் போனதற்கு யார் காரணம் என்பதை சொல்ல மறந்துவிட்டார்.

உள்ளாட்சிக்கு கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் தேர்தல் நடத்துவதற்கு அறிவிப்பு செய்யப்பட்டது. அப்போது, பழங்குடியினருக்கு உரிய இடம் ஒதுக்கப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேர்தலை ரத்து செய்தது திமுக-தானே?

இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் மறுசீரமைப்பு செய்வதற்கு எத்தனை கால அவகாசம் எடுக்கும் என்பது பல முறை மேயர் பொறுப்பில் இருந்த திமுகவினருக்குத் தெரியாதா? தேர்தல் அறிவிப்பு செய்த பிறகு தடையாணை பெற்றதால்தானே மக்கள் பிரதிநிதிகள் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது.

தோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்திய திமுகவே, தேர்தல் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் நாடகமாடுவது திமுகதான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அதனால் பொய்யான குற்றச்சாட்டுகள் கூறுவதை திமுகவினர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.