சென்னை: அதிமுகவுக்கு விசுவாசமானவர்கள் யார்? துரோகி யார்  என்பதில் முன்னாள் முதலமைச்சர்களான இபிஎஸ்  ஓபிஎஸ்  இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. ஒருவரை ஒருவர்  மாறி மாறி துரோகிகள் என கூறி வருகின்றனர்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பெருந்தோல்வி அடைந்துள்ளதுடன், பல இடங்களில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட விவகாரமும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இடையடுத்து பிரிந்து கிடக்கும் அதிமுக மீண்டும் இபிஎஸ், ஓபிஎஸ்  ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சில மூத்த தலைவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், ஈகோ காரணமாக இருவரும் கட்சியை ஒன்றிணைப்பதில் ஆர்வம் காட்டாமல்  செயல்பட்டு வருகின்றனர்.  இருந்தாலும், அதிமுக இணை வேண்டும் என ஒபிஎஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  தமிழ்நாட்டில் கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.   தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் சூழலை பார்க்கிறோம். சட்டம் ஒழுங்கு படுபாதாளத்தில் சென்றுவிட்டது. காவல்துறைக்கு யாரும் அச்சப்படுகின்ற சூழல் இல்லை, சர்வ சாதாரணமாக கொலை நடைபெறுகிறது என்று காட்டமாக விமர்சித்தார்.

பின்னர் ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதில் கூறியவர்,  ஓபிஎஸ் நினைப்புக்கெல்லாம் நாங்கள் உடன்பட முடியாது. அதிமுக பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கிவிட்டோம். அவர் யாருக்கும் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. நாங்கள் ஒன்றாக இருந்தபோது பல கோரிக்கைகளை வைத்தார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொன்னார், யாரை சுட்டிக்காட்டி சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் அதற்கு ஆணையம் வைத்து விசாரித்தோம். விசாரணை ஆணையம் அமைக்க என்னை நிர்பந்தப்படுத்தினார். சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவி வேண்டும் என்று கேட்டார். 97 சதவிகிதம் பேர் அப்போது எனக்கு ஆதராவாக இருந்தபோதிலும் கூட மூத்த நிர்வாகிகளிடம் கேட்டு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தோம்.

2019-ல் தேனியில் அவர் மகனுக்கு மட்டும்தான் வேலை பார்த்தார், மற்ற தொகுதிகளில் வேலை செய்யவில்லை. கட்சியைப் பற்றி கவலைப்படாமல் மகனைப் பற்றி கவலைப் பட்டார். ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிறபோது அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அவர் ஒத்துக்கொள்ளவே இல்லை. அதன் பிறகுதான் நீதிமன்றம் சென்றார், பொதுக்குழு கூடி நடவடிக்கை எடுத்து ரெளடிகளை வைத்து கட்சியினரை தாக்கி தலைமை அலுவலகத்தில் கதவுகளை உடைத்து உள்ளிருந்த பொருள்களை சூறையாடினர். இரட்டை இலையை முடக்க தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் இணக்கமாக இருப்பார் என்று பார்த்தால், ராமநாதபுரத்தில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டார். பணத்தால்தான் வாக்குகள் பெற்றார். இவர் எப்படி விசுவாசமாக இருப்பார்? விசுவாசமான இருந்ததாக வரலாறு இல்லை. அதிமுக-வில் அவர் இணைய ஒரு சதவிகிதமும் வாய்ப்பில்லை என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள ஓபிஎஸ்,  “நான் விசுவாசமற்றவனா? துரோகம், பொய்மை, வன்முறை, செய்நன்றி மறத்தல் ஆகியவற்றின் மொத்த உருவமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது அதை பேச இபிஎஸ்க்கு அருகதை இல்லை”,   அதிமுகவுக்கும் அம்மா ஜெயலலிதாவுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் என்பதை அவர்களே மக்களுக்கு பறைசாற்றி சொல்லியிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவுக்கும் அம்மா ஜெயலலிதாவுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் என்பதை அவர்களே மக்களுக்கு பறைசாற்றி சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய விசுவாசத்திற்கு ஈடாக ராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு அம்மா ஜெயலலிதா பேசியுள்ளார்கள். அதை மக்களும் அறிவார்கள். அதைப்பற்றி பேச பத்துத் தோல்வி பழனிசாமிக்கு தகுதி இல்லை.

முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவர்க்கு துரோகம், 4 ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம், என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்” எனத் தெரிவித்துள்ளார்.


மேலும், “வெறும் 3 விழுக்காடு ஆதரவு இருந்த எனக்கு ஒருங்கிணைப்பாளர் பதவியும் துணை முதல்வர் பதவியும் கொடுத்ததாக இபிஎஸ் சொல்கிறார். ஆனால் நான் தர்ம யுத்தம் நடத்தியபோது 42 விழுக்காடு ஆதரவு இருந்தது. தொடர்ந்து கோயம்புத்தூரில் எனக்கு கூடிய கூட்டத்தை பார்த்து தவழ்ந்து, ஊர்ந்து, காலில் விழுந்து இபிஎஸ் பெற்ற முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேலுமணியையும் தங்கமணியையும் தூதுவிட்டார்.

எடப்பாடி பழனிசாமியிடம் நான் எந்த பதவியும் கேட்கவும் இல்லை. கேட்கவும் மாட்டேன். இபிஎஸ் பதவி வெறி பிடித்தவர். இபிஎஸ்சுடன் சேர எனக்கு மனமில்லை என்றாலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும் என்ற அம்மாவின் வார்த்தைக்காக இணைவதற்கு முடிவெடுத்தேன்.

பிரதமர் மோடி வலியுறுத்தலின் பேரிலேயே துணை முதல்வர் பதவியை ஏற்றேன். எந்தக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று தான் நான் சொல்லி வருகிறேன். கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி” என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக தலைவர்களிடையே இடையே எழுந்துள்ள அதிகார மோதல் காரணமாக,  பலமான அதிமுக கட்சி, தற்போது பலவீனமடைந்து வருகிறது.இதனால் எராளமான அதிமுக தொண்டர்கள் மாற்று கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர் என்பது, அதிமுகவின் உண்மையான நிர்வாகிகளிடையே அச்சத்தை எற்படுத்தி உள்ளது.