சென்னை:
அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு யூகத் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்த நிலையல், அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி பொன்னையன், இது குறித்து செய்தியாளரிடம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர்,  “அ.தி.மு.க.வின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்று பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. இதை சிலர்  திட்டமிட்டு  பரப்பி வருகிறார்கள்.    ஜெயலலிதாவிற்கு பிறகு புதிய பொதுச்செயலாளர் ஒருவரை கழகம் விரைவில் தேர்ந்தெடுக்கும். தொண்டர்களை காக்கும் ஒருவரே பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்: பொன்னையன் இந்தப் பதவிக்கு போட்டி உருவாகவில்லை. அதிமுக ஒற்றுமை நிறைந்த கட்சி.  இதிலே போட்டி என்பதோ, பிரச்சனைகள் என்பதோ இல்லை”  என்று தெரிவித்தார்.
மேலும், “அதிமுகவில் சசிகலா முக்கியமான உறுப்பினர். ஜெயலலிதாவின் அணுகுமுறையை பின்பற்றுவோம். அதிமுகவில் சூன்யமான சூழ்நிலை உருவாகவில்லை.   அதிமுகவை யாரும் கட்டுப்படுத்தவில்லை” என்றும், “போயஸ்கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்று வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைக்கு அதிமுகவின் செயற்குழுவில் முடிவு செய்யப்படும்” என்றும் தெரிவித்தார்.
அதோடு, “ஓ.பன்னீர்செல்வம், ஆட்சியில் கவனம் செலுத்துவார், பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணியை கட்சி கவனித்துக்கொள்ளும்” என்றும் பொன்னையன் தெரிவித்தார்.