சென்னை,

திமுகவின் அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மூத்த நிர்வாகியும், சென்னை மாநகர முன்னாள் மேயருமான சைதை துரைசாமி டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் அதிரடி கேள்விகளை தொடுத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி  இருந்தேன். சசிகலா அளித்த அமைப்பு செயலர் பதவியை நிராகரித்தும் கடிதம் அனுப்பினேன். இந்நிலையில் என்னை வம்புக்கு இழுத்துள்ளார் டிடிவி தினகரன் என்று காட்டமாக கூறினார்.

மேலும், தினகரனுக்கும் அ.தி.மு.க.வுக்கும் என்ன தொடர்பு? தற்போது தினகரனின் முரண்பட்ட நடவடிக்கைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. யார் இவர்? கட்சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு? கடந்த 10 ஆண்டுகளாக எங்கு இருந்தார். ஜெயலலிதா இவரை ஏன் ஒதுக்கினார் என சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தார்.

கடந்த 2012 ல் ஜெயலலிதா வீட்டில் இருந்து  நீக்கப்பட்ட சசிகலா, பின்னர்  ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தை பற்றி யாரும் பேசவில்லை. அந்த கடிதத்தில், ‘ஜெயலலிதாவுக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். உறவினர்கள் நடவடிக்கை பற்றி தெரியாது. அவர்களை என்றும் மன்னிக்க மாட்டேன். கட்சியில் பெரிய பொறுப்புகள் எதையும் எதிர்பார்க்கவில்லை’ எனக்கூறியிருந்தார்.

இந்த கடிதம் மூலம் நம்பிக்கை துரோகம் செய்தது யார்? 420 யார் என்பது மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும்  தெரியும்.

இத்தனை நாட்களாக அரசியலில் ஈடுபடாமல், கல்வி பணியில் மட்டும் ஈடுபட்டிருந்தேன். தினகரன்என்னை வீம்பாக வம்புக்கு இழுத்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.