சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை  உள்பட  மாநிலம் முழுவதும் தெருநாய்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக சாலையில் செல்லும் மக்கள் நாய் கடிக்கு ஆளாகி வருகின்றனர்.  அதனால், இந்த தெருநாய்களை கட்டுப்படுத்துவது யார் என கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில்,நேற்று ( மார்ச் 19ந்தேதி) மட்டும் ஒரே நாளில் திருச்சி மணப்பாறை பகுதியில் 20 பேர் தெருநாயால் கடிக்கப்பட்டு உள்ளதாகவும், கடந்த இரு மாதங்களில் மட்டும், சுமார்  500க்கம் மேற்பட்டோர் தெருநாய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைநகர் சென்னையில்,  பல தெருக்களில் அங்கேயும், இங்கேயும், நாய்கள் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பயத்துடனே நாயை கடந்து செல்ல வேண்டி உள்ளது.  குறிப்பாக பணி முடிந்து வீட்டு வரும் நபர்கள்,  இரவு வாகனங்களில் செல்பவர்களை   நாய் துரத்துவதால் அச்சத்தில் நிலை தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.  இதுமட்டுமின்றி, அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி செல்பவர்கள் இரவு நேரம் வேலை முடிந்து விடு திரும்புவோர், ரெயில்களில் இருந்து இறங்கி வீடுகளுக்கு செல்பவர்கள், முதியோர் என  பலரும் தெரு நாய்களின் தொல்லைக்கு ஆளாகி வருகின்றன.

தமிழகத்தின்  சென்னை பல முக்கிய நகரங்களில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தெருக்களில் மக்கள்  நடந்து செல்லவே பயப்படும் நிலை உருவாகி உள்ளது.   தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே வரும் நிலையில் மாநில அரசும், நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சிகளும் அதில் ஆர்வம் காட்டாத மனநிலையே தொடர்கிறது.

சட்ட சிக்கல் காரணமாக தெரு நாய்களை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருக்கிறது. நாய்களை கொல்லக் கூடாது. கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் பிடிக்கப்பட்ட இடத்திலேயே விட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அதே போல் பிறந்து 7 மாதம் முதல் ஒரு வயது வரை உள்ள நாயை கருத்தடை செய்யக்கூடாது என்றும் சட்ட விதிகள் உள்ளது. நாயை கொன்றால் 5 ஆண்டு சிறை தண்டனை என்றும் சட்டம் சொல்கிறது.  இதனால் தெருநாய்களின் தொல்லை கட்டுப்படுத்த அரசு நிர்வாகம் தயங்கி வருகிறது. நாய்களை கட்டுப்படுத்தினால், ஒரு சில விலங்கு ஆர்வலர்கள் புகார்கள் கொடுப்பார்கள் என்ற பயத்தில், அரசு ஊழியர்களை இந்த விஷயத்தில் கவனம் செலுத்த மறுத்து வருகின்றனர். இதனால் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாடாளுமன்ற விவாதத்திலும், இந்த நாய்கடி சம்பவங்கள் எதிரொலித்தன. இந்தியாவில் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 21,95,122 நாய் கடி வழக்குகளும் 37 இறப்புகளும் பதிவாகியுள்ளது. இதில் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் நாட்டிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் இந்த விவகாரங்கள் மாநில அரசுகளின் வரம்பிற்கு உட்பட்டது. எனவே, இந்த சம்பவங்களை கையாள மாநில அரசுகள்தான் கடமைப்பட்டுள்ளன என்றும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் லாலன் சிங் மக்களவையில் எழுத்துபூர்வமாக சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் திருச்சி அருகே உள்ள மணப்பாறையில்  20 பேரும் கடந்த இரண்டு மாதங்களில் 500 பேரும் நாய் கடியால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கனிற்ன.

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றிக் கொண்டு திரிவதாகவும், தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டு களாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர்மன்ற கூட்டங்களில் கவுன்சிலர்கள் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை வைத்தும் பலனில்லை என்று அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,    நேற்று (மார்ச் 19)  காலை முதல் இரவு வரை மட்டும் மஸ்தான் தெரு மற்றும் காந்திநகர் பகுதிகளை சுற்றித்திரிந்த வெறிநாய்கள் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து காயப்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 500-க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் மணப்பாறை பகுதியில் பாதிக்கப்பட்டு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

ஜனவரி 11ஆம் தேதி நாய்க்கடி பாதிப்புக்கு ஆளான நாகராஜ் என்பவர் நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். நகராட்சி அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து வைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும்  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் அப்பகுதி மக்கள், நகராட்சி நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த பகுதி மக்களே நாய்களை கொல்ல வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்,   நாய்க்கடியில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.