சீனப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 145 சதவீத வரியை மே 14ம் தேதி முதல் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதேபோல் அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா விதித்த வரி உயர்வையும் 90 நாட்களுக்கு நிறுத்த சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நான்கு மாதங்களில் பல்வேறு அதிரடிகள் காட்டிய நிலையில் அமெரிக்க பொருட்கள் மீதி அதிகப்படியான வரி விதிக்கும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது வரியை உயர்த்துவதாக காட்டிய அதிரடியால் உலகமே அரண்டது.

டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கை சீனா, கனடா உள்ளிட்ட நாடுகளை வெகுவாக பாதித்த நிலையில் அந்த நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்தி அமெரிக்காவை மிரள வைத்தது.

இந்த நிலையில், சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பும் வரி உயர்வை நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்த வரியை குறைக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்கத் தரப்பு அறிவித்துள்ளது.

தவிர, பாகிஸ்தானுடனான போரை நிறுத்த இந்தியா சம்மதித்ததை அடுத்து அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் ஆஃபர்களையும் டொனால்ட் டிரம்ப் அள்ளிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.