2022ம் ஆண்டின் உலகின் டாப் டென் பணக்காரர்கள்  யார்? என்பது தொடர்பாக ஹுருன் நிறுவனம் மற்றும் ஃபோர்ப்ஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் மாறுப்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பிரபல நிறுவனமான ஹுருன் நிறுவனம் வெளியிட்ட உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானியின் பெயர் இடம்பெற்றுள்ளது. அதே வேளையில், ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி பெயர் இடம் பெறவில்லை.

இருபெரும் நிறுவனங்களும், உலகின் பணக்கார்கள் யார் அவர்களின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து ஆய்வு செய்து பட்டியலை வெளியிடுகிறது. இந்த நிலையில், இரு நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்கள் மாறுப்பட்டு காணப்படுகிறது.

2022ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹூருன் நிறுவனம், எம்3எம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது.  இந்த  பட்டியலில் டாப் 10 இடங்களில் இந்தியாவிலிருந்து ஒரே தொழிலதிபராக ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். மேலும் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் புதிதாக கொரோனா தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் நிறுவன இயக்குனர் சைரஸ் பூனாவல்லா, ராதாகிஷன் தமானி  என மேலும் சிலர்  இந்தியாவில் இருந்து முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில், முகேஷ் அம்பானி சுமார் ரூ.7.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 9ம் இடத்தை பிடித்துள்ளார்.  இப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளவர் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க். அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் இரண்டாமிடமும், பிரான்ஸ் ஆடம்பர பொருட்கள் நிறுவனமான எல்.வி.எம்.எச்., சி.இ.ஓ., பெர்னார்ட் அர்னால்ட் மூன்றாமிடமும் பிடித்துள்ளனர்.

முகேஷ் அம்பானிக்கு அடுத்தப்படியாக இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ள முன்னணி தொழிலதிபர்கள் பட்டியலில் அதானி 2ம் இடம் வகிக்கிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய். எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார் ரூ.2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். சீரம் மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலா சுமார் ரூ.1.9 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் நான்காம் இடம் பிடித்துள்ளார். மேலும் இப்பட்டியலில் லட்சுமி மிட்டல், டிமார்ட் நிறுவனர் தமானி, ஹிந்துஜா குடும்பத்தினர், குமார் ஆகியோர் முன்னணி இடம் வகிக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து 215 கோடீஸ்வரர்கள் இப்பட்டியலில் உள்ளனர். அதில் நைக்கா நிறுவனர் பால்குனி நாயர் உட்பட 58 பேர் புதியவர்கள். உலகளவில் பெரிய பணக்காரர்களை உருவாக்கும் நாடாக இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. கோடீஸ்வரர்களின் நகரமாக மும்பை விளங்குகிறது. 72 பேர் அங்கு வசிக்கின்றனர்.

அதுபோல பிரபலமான நிறுவனமான ஃபோர்ப்ஸ்  நிறுவனம் 2022 உலக பணக்கார்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், முகேஷ் அம்பானி பெயர் இடம்பெறவில்லை.

இந்நிறுவனம் , உலகின் மிகப் பெரிய பணக்காரர்களின் சமீபத்திய நிகர சொத்து மதிப்பு மற்றும் நிதி செயல்திறனைப் பொறுத்து ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். இந்த ஆண்டு ஜனவரி 28, 2022 இன் நிகழ்நேரப்படி,  உலகின் முதல் 10 பணக்காரர்களின் சமீபத்திய பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் எலன்மஸ்கே தொடர்ந்து முதலிடத்தில் இடம் பெற்றுள்ளார். ஆனால், முகேஷ் அம்பானி பெயர் இடம்பெறவில்லை.

  1.  எலோன் மஸ்க் – $218.3 பில்லியன்
  2. பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம் – $188.6 பில்லியன்
  3. ஜெஃப் பெசோஸ் – $165 .5 பில்லியன். …
  4. பில் கேட்ஸ் – $130.7 பில்லியன். …
  5. வாரன் பஃபே – $111.1 பில்லியன். …
  6. லாரி பேஜ் – $111 பில்லியன். …
  7. லாரி எலிசன் – $108.2 பில்லியன். …
  8. செர்ஜி பிரின் – $107.1 பில்லியன். …
  9. மார்க் ஜுக்கர்பெர்க் – $104.6 பில்லியன். …
  10. ஸ்டீவ் பால்மர் – $95.7 பில்லியன்

உலகின் மிகபெரிய ஆய்வு நிறுவனங்களான ஃபோர்ப்ஸ், ஹுருன் நிறுவனங்கள் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருவது அந்த நிறுவனங்களின் மீதான உண்மைத்தன்மை சந்தேகிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.