வாஷிங்டன்:

மெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கடந்த 2-ம் தேதி கொரோனா தொற்று பரவியிருப்பது  உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் வெள்ளைமாளிகையில் இருந்த டொனால்டு டிரம்பிற்கு லேசான அறிகுறியுடன் காய்ச்சல் ஏற்பட்டது.

காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததையடுத்து, அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்படும்போது டிரம்ப்பின் நிலைமை சற்று மோசமாக இருந்ததாக தகவல் வெளியான நிலையில் அவர் ரெம்டெசிவிர் மருந்தை தொடர்ந்து எடுத்து வந்தார்.

இதன் பின் அவரின் உடல்நிலை சீரானதையடுத்து, மருத்துவமனையில் இருந்து டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டாலும் அதிபர் டிரம்ப் வெள்ளைமாளிகையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், வெள்ளைமாளிகை ஊழியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. வெள்ளைமாளிகையில் நடைபெறும்  செய்தியாளர்கள் சந்திப்பின் மூலமாகவே அதிபர் உள்பட பலருக்கும் கொரோனா பரவியிருக்கலாம் என தகவல் வெளியாகி வருகிறது.

வெள்ளைமாளிகையில் பணி செய்துவரும் அதிபர் டிரம்ப்பின் உதவியாளர் ஹோப் ஹூக்ஸ் என்பவருக்கே முதலில் கொரோனா உறுதியானது. இதை தொடர்ந்து பலருக்கும் கொரோனா பரவி வருகிறது.

இந்நிலையில், வெள்ளைமாளிகை செய்தித்தொடர்பாளரான கெய்லீ மெக்கெனிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கெய்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த வியாழக்கிழமை முதல் தினமும் மேற்கொண்டுவரும் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்து கொண்டிருந்தது. ஆனால், நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், அறிகுறிகள் எதுவும் இல்லை. இதனால், நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு எனது பணிகளை தொடர்ந்து மேற்கொள்வேன்’ என தெரிவித்துள்ளார்.