லண்டன்: 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ள நிலையில், முதல் போட்டியை வெற்றியுடன் துவக்க திட்டமிட்டுள்ளது போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து.

கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்படும் அணிகளில் இங்கிலாந்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தென்னாப்பிரிக்கா அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

அந்த அணியின் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பந்துவீச்சாளரான டேல் ஸ்டெயின் தோள்பட்டை காயம் காரணமாக, இத்தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதானது அந்த அணிக்கு பெரிய சரிவாக அமைந்துள்ளது. எனவே, தகுதியான வேறு ஒரு பந்துவீச்சாளரை கண்டறிய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் வலுவான துவக்க பேட்டிங் இணையான ஜேஸன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை சமாளித்து, விரைவில் ஆட்டமிழக்க செய்ய வேண்டுமெனில், நல்ல வேகப்பந்து வீச்சாளர் அவசியம்.

தென்னாப்பிரிக்க அணி இந்த உலகக்கோப்பையில் டு பிளெசிஸ் தலைமையில் களம் காண்கிறது. பொதுவாகவே, நெருக்கடியான நேரங்களில், உளவியல் ரீதியாக சொதப்பி, தொடர்ச்சியாக தோல்வியடையும் அணிதான் தென்னாப்பிரிக்க அணி என்ற பெயரை துடைக்க முடியாமல் நீண்டகாலமாக அவதிப்பட்டு வருகிறது அந்த அணி.