1992ம் வருடம், “மிஸ் சென்னை” பட்டம் வென்று, “ஆத்தா உன் கோயிலிலே..” படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கஸ்தூரி. நிறைய படங்களில் நடித்தவர், பிறகு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். மீண்டும் தாயகம் திரும்பியவர், அதிரடி ட்விட்களுக்கு பெயர் பெற்றவர் ஆகிவிட்டார்.
கமல், ரஜினியில் இருந்து மத்திய அரசுவரை அதிரடியாக இவர் விமர்சிக்காத அரசியல் விசயங்களே இல்லை. தொலைக்காட்சி விவாதங்களிலும் தனது கருத்துக்களை வெளிப்படையாக எடுத்துவைக்கிறார். நாம் தமிழர் கட்சி மேடையிலும், வைகோ பேசிய மேடையிலும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார் கஸ்தூரி பி.எல். ஆமாம்.. சட்டம் படித்தவர் இவர்.
இந்த நிலையில், “கஸ்தூரி, தி.மு.க.வில் சேரப்போகிறார். இல்லையில்லை.. அ.தி.மு.க.வில் சேரப்போகிறார்” என்று பலவித தகவல்கள் ரெக்கைகட்டி பறக்கின்றன.
எது நிஜம்?
பத்திரிகை டாட் காம் இதழுக்காக கஸ்தூரியிடம் பேசியதில் இருந்து..
“பாலிடிக்ஸா.. அய்யோ எனக்கு ஒன்னும் தெரியாது.. ஐ லவ் சாக்லேட்” என்கிற ரீதியில்தான் நடிகைகள் பேசுவார்கள் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் நீங்கள் எந்தவொரு அரசியல் விவகாரமானாலும் அதிரடியாக கருத்து தெரிவிக்கிறீர்கள்.. இது எப்படி?
(சிரிக்கிறார்) நடிகைகள் பொதுவாக பள்ளி செல்லும் 15 வயதில் நடிக்க வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் குழந்தையாகத்தானே இருப்பார்கள். அதனால் பொது விசயங்கள் பற்றிய தெளிவு அவர்களுக்கு இருக்காது என்பது இயல்புதானே!
பிறகு அனுபவம், படிப்பு காரணமாக விசயங்களைத் தெரிந்துகொள்கிறார்கள். விபரமாக பேசுகிறார்கள்.
தவிர கலைஞர்களின் உலகம் தனிப்பட்டது. எங்களுக்குத் தெரிந்த விசயங்கள் உங்களுக்கு சொன்னால் புரியாது. உங்களுக்குத் தெரிந்த விசயங்கள் மீது எங்களுக்கு விருப்பமே இருக்காது.
ஆகவே நட்சத்திரங்கள் என்றால் உலக விசயமே தெரியாது என்ற ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் திரைத்துறையில் எத்தனையோ அறிவுஜீவிகள், சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் இருந்தார்கள்.. இருக்கிறார்கள்.
இயக்குநர் கே.சுப்ரமணியத்தில் இருந்து அண்ணா, கருணாநிதி, வாலி,கமல் என்று ஆரம்பித்து சமீபத்தில் வெளியான ஜோக்கர் படத்தை இயக்கிய ராஜூ முருகன் வரை எத்தனையோ பேரைச் சொல்ல முடியுமே.
சமூக கருத்துக்களை ஆழமாகப் பேசும் சத்யராஜ், மணிவண்ணன், சுகாசினி, ரேவதி, ரூபா கங்கூலி, சபனா ஆஸ்மி என்று சொல்லிக்கொண்டே போகலாமே.
இவர்களில் சிலர் நேரடியாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தேர்தலில் நின்றிருக்கிறார்கள்.
ஆகவே திரைத்துறையினருக்கு உலக விசயம் தெரியாது என்பது தவறாக கட்டமைக்கப்பட்ட பிம்பம்.
திரைத்துறையினர் அரசியலுக்கு வரக்கூடாது என்ற ஒரு கருத்து வைக்கப்படுகிறதே..
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஏற்கெனவே நான் சொன்னது போல திரைத்துறையினரிலும் அறிவார்ந்த பலர் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு அமைச்சர், “நம் பிரதமர் மன்மோகன் சிங்” என்று பேசியிருக்கிறார்.
இவரைப்போன்றவர்களைவிட எந்த வகையில் தவறாக ஒரு நடிகரோ, நடிகையோ பேசிவிட்டார்கள்?
கமல், ரஜினி இருவரில் அரசியலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?
எனக்கு ஜோதிடம் தெரியாது. யூகம்தான். அரசியலுக்கு வந்தால் இருவருமே பெரிய அலையை ஏற்படுத்துவார்கள்.
ஆனால் “வெற்றி” என்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பது முக்கியம். அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகி, கோடி கோடியாக சுருட்டுவதைத்தான் வெற்றி என்றீர்கள் என்றால் இந்த இருவரும் தோற்கவேண்டும் என்றே நான் வேண்டிக்கொள்வேன்.
மக்களுக்கான ஒரு விழிப்புணர்வையும் தொண்டையும் செய்வதுதான், அரசியல் வெற்றி என்றால் அதை வரவேற்பேன். இதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
அதற்கு தேர்தலில் ஒரு சீட் கூட வெற்றி பெற வேண்டியதில்லை.
நீங்கள் தி.மு.க.வில் சேரப்போவதாக… அ.தி.மு.க.வில் சேரப்போவதாக எல்லாம் செய்தி உலாவருகிறதே?
இரண்டு நாள் முன்னால், நான் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக சோசியல் மீடியாவில் எழுதினார்கள். மீடியாக்கள் சிலவற்றிலும் இது போலவே செய்தி வந்தது.
நேற்று தி.மு.க.வில் சேரப்போவதாக எழுதினார்கள். இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேரப்போவதாக எழுதுகிறார்கள். இடையில் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்துவிட்டதாகவே எழுதினார்கள்.
இப்படி பல கட்சிகளின் உறுப்பினர் அட்டைகளை எனக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறது மீடியா.
இவர்கள் எழுதாத ஒரு விசயத்தைச் சொல்கிறேன்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இப்போ ஐந்து நிமிடத்துக்கு முன்புதான் பர்சனலா போன் பண்ணி, தன்னோட கட்சியில் சேரும்படி அழைத்தார். “உங்களது சேவை எங்களுக்குத் தேவை” என்றார்.
“பல கட்சிகளில் இருந்து அழைப்பு வருகின்றது. எல்லா அழைப்புகளையும் பரிசீலித்து யோசித்து சொல்கிறேன்” என்று டிரம்ப்புக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அதை யாரும் எழுதாததை வன்மையாகக் கண்டிக்கிறேன். (சிரிக்கிறார்.)
ஒருவேளை சொந்தமாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களோ..
(சிரிக்கிறார்) அப்படி ஒரு எண்ணமும் இல்லை.. துட்டும் இல்லை. தவிர, எனக்கு குடும்பக் கடமைகள் நிறைய இருக்கின்றன. ஆகவே 24 மணி நேரமும் மக்கள் தொண்டாற்றுவேன் என்றெல்லாம் சிலரைப்போல பொய்யாக டயலாக் பேச என்னால் முடியாது.
இப்போதைக்கு ஒரு அறக்கட்டளை வைத்து, குழந்தைகளுக்காகவும் பெண்களுக்காகவும் சில நன்மைகள் செய்து வருகிறேன். கொஞ்சம் கொஞ்சமாக இந்த பணியை பெரிதாக்கி பலருக்கும் நன்மை செய்ய வேண்டும்.
ஒரு காலகட்டத்தில் சமூகப்பொறுப்பைத் தாண்டி அரசியலில் ஈடுபட்டுத்தான் ஆகவேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால், எந்தவொரு சவாலையும் சந்திக்கும் குணம் எனக்கு உண்டு.
அப்படியானால் உங்கள் சாய்ஸ் எது.. தேசிய கட்சியா.. மாநில கட்சியா?
எப்போதுமே தனக்கு மிஞ்சிதான் தானம் தர்மம். எனக்கு தமிழுக்கு அடுத்துதான் மற்ற எதுவும். நமது சொந்த பிரச்சினைகளை நிறைய இருக்கும்போது உலக பிரச்சினைகளை பிறகு கவனித்துக்கொள்ளலாம்.
திராவிடத்தின் ஒரு தூண் வகுப்புவாதம். ஆகவே அதை ஏற்க முடியாது. ஆனால் இன்றைய திராவிட கட்சிகள், தூய திராவிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்கள். ஆகவே திராவிட கட்சிகள் என்றால் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.
தமிழ் தேசியம் என்ற பெயரில் தீவிரவாதம் – பிரிவினை பேசுவதில் எனக்கு கொஞ்சம்கூட உடன்பாடு இல்லை. தமிழ் என்பது இனம் அல்ல. உணர்வு.
தமிழ் தேசியம் என்பது குறுகிய வட்டம். அதற்கு பதிலாக உலக அளவில் தமிழ் – தமிழர் என்று பேசலாமே.
இன்று ராஜராஜசோழன் பிறந்தநாள். சோழர் காலத்தில் கங்கை முதல் கடாரம் வரை தமிழர் ஆட்சி இருந்ததே.
இன்று ஆட்சி என்றால் பொருளாதாரம்தான். சுந்தர்பிச்சை கூகுளை ஆண்டுகொண்டிருக்கிறார்.
அது போல எல்லா பெரு நிறுவனங்களிலும், ஐ.நா.விலும் தமிழர்கள் கோலோச்ச வேண்டும் என்று நினைக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு தமிழ் பேசாதவர்கள்… தெரியாதவர்கள் எங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்று சொல்வது தவறு.
தமிழகத்தை எவர் நாடி வருகிறார்களோ அவர்களை தமிழர்களாக நாம் வரவேற்க வேண்டும்.
சரி.. அப்படி என்றால் எந்த கட்சியில்தான் சேர்வீர்கள்?
எல்லோருக்கும்… எதிரிக்கும்கூட தலைவராக இருப்பவரே சரியான தலைவராக இருக்க முடியும். அதுபோல விமர்சனங்களை ஏற்கக்கூடிய ஒருவரின் தலைமையில் இயக்கம் தோன்றினால்.. கெஞ்சி கூத்தாடிக்கூட அதில் சேருவேன்.
(தொடரும்)
@ கமல் எட்டடி பாய்ந்தால் விஜய் நாற்பத்து எட்டடி பாய்வார் என்றதன் அர்த்தம்
@ பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள்…
@ சமூகவலைதளங்களில் நடக்கும் தனி நபர் தாக்குதல்கள்..
ஆகியவை குறித்து கஸ்தூரி அளித்த பதில்கள் அடுத்த பகுதியில்..