“மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுப்படுத்தி தூண்டிக்கொண்டே இருப்பது எமது கடமை!”

என்ற வாசகம் இடதுசாரி சிந்தனைகொண்ட ஒரு தமிழ் இணையதளத்தின் முகப்பில் இடம்பெற்றிருக்கும் ஒன்றாகும்!

அந்த இணையதளம் 15 ஆண்டுகளாக இயங்கிவருகின்ற ஒன்றாகும். அந்த இணையதளத்தின் அறிமுகம் எனக்கு கிடைத்த காலத்தில், அந்த வாசகம் என்னைக் கவர்ந்தது இயல்பான ஒரு விஷயம்தான்!

தேர்தல் அரசியலில் ஈடுபடுவோர் தவிர, அதில் ஈடுபடாத இயக்கம் சார்ந்த நபர்கள்கூட, தாங்கள் பங்கேற்கும் பொது நிகழ்வுகளில், “மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் எதையும் மறக்கமாட்டார்கள்” என்று சொல்வதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி சொல்வதன் மூலம், ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மக்களுக்கு நினைவுப்படுத்தி வலியுறுத்துவது அவர்களின் மறைமுக நோக்கமாக இருக்கலாம் என்று நாம் அர்த்தப்படுத்திக்கொண்டாலும், நமது சமூக அமைப்பிலும், நமது தேர்தல் நடைமுறைகளிலும் நமது மக்கள் எப்படியானவர்கள்? என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் தோன்றத்தான் செய்கிறது!

நமது மக்கள் உண்மையிலேயே யார் எப்படியானவர்? யார் சரியானவர்? என்பதை துல்லியமாக கணித்துதான் வாக்களிக்கிறார்களா? தமக்கான நன்மை செய்தவர்கள் மற்றும் செய்யக்கூடியவர்கள் யார்? என்பதை மதிப்பிடும் திறன் அவர்களுக்கு உள்ளதா? உள்ளிட்ட கேள்விகளுக்கு எளிமையான முறையில் பதிலளித்துவிடலாம்தான்! ஆனால், சற்று ஆழமான பதிலுக்கு முயற்சி செய்தால் அதில் தவறில்லையே..!

பொதுவாக, முதலாளித்துவ, நிலமானிய மற்றும் காலனிய ஜனநாயக அமைப்புகளில் தேர்தல்கள் என்பதே ஒரு புரியாத விளையாட்டுதான்! உண்மையிலேயே, மக்களின் வாக்குகள்தான் வெற்றி-தோல்விகளை தீர்மானிக்கிறதா? அல்லது மக்கள் திட்டமிட்டு ஒரு விஷயத்தை நோக்கி உந்தப்படுகிறார்களா? என்பது குறித்த ஆய்வுகளெல்லாம் தனி ரகம்!

இத்தகைய தேர்தல் நடைமுறைகளில், சிலர், தேர்தல்களில் தொடர்ந்து வெல்கிறார்கள் என்பதை வைத்து, அவர்கள் உண்மையிலேயே நல்லது செய்கிறார்கள் என்றெல்லாம் நிச்சயமாக சொல்ல முடியாது. அப்படியென்றால், குஜராத்தில் 3 முறை தொடர்ச்சியாக சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்றத்தில் 2 முறையும் தொடர்ச்சியாக வென்ற மோடி, மக்களுக்கு நல்லது செய்தவர் என்ற பொருளாகிறது!

மேலும், தற்போது ஒடிசாவில் 5வது முறையாக தொடர்ந்து வென்றுள்ள நவீன் பட்நாயக், அம்மாநிலத்தை சிறந்த மாநிலமாக மாற்றியுள்ளரா? என்ற கேள்வி எழுந்தால், அதற்கான பதில் நேர்மறையாக இருக்குமா?

ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் 3 முறை தொடர்ச்சியாக வென்ற எம்.ஜி.ராமச்சந்திரன் பொற்கால ஆட்சியை கொடுத்தவரா?

கேரளாவில், காங்கிரஸ் & கம்யூனிஸ்ட் கூட்டணிகள், மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன என்ற சாதாரண காரணத்தை வ‍ைத்து, அம்மக்களை தேர்தல் அறிவாளிகள் என்று சொல்லலாகுமா?

மேற்குவங்கத்தில் 33 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்ட கம்யூனிஸ்ட் ஆட்சி மீதும், அக்கட்சியின் தேர்தல் செயல்பாடுகள் மீதும் கடும் விமர்சனங்கள் இருந்ததை மறுக்க முடியாது.

கீழ்மட்ட பூத் ஏஜெண்ட் தொடங்கி, தேர்தல் என்று வருகையில், நிர்வாக கட்டமைப்புகள் மிகவும் நுட்பமானவை மற்றும் கடினமானவை. அந்த விஷயங்களில் நன்றாக வளர்ச்சியடையும் ஒரு கட்சிதான், ஆட்சியைப் பிடிக்கும் என்ற நிலை. அப்படி வளர்ச்சியடைந்து விட்டாலும்கூட, அவ்வாறாக வளர்ச்சியடைந்த கட்சிகளிலேயே நல்ல கட்சிக்குத்தான் மக்கள் வாக்களிக்கிறார்களா? அல்லது அவர்களின் வாக்குகள் திட்டமிட்டு தீர்மானிக்கப்படுகிறதா? என்ற ஆய்வுகளெல்லாம் உள்ளன.

அம்பேத்கர் என்ற ஒரு மாமனிதரை எடுத்துக்கொள்வோம். அன்றைய இந்தியாவில் கல்வி அளவில் மிகவும் அதிகம் படித்தவர் என்பது மட்டுமல்ல, கடந்த 2000 ஆண்டு இந்திய வரலாற்றில் ஒரு மாபெரும் நிகரற்ற அறிவாளி என்றும் போற்றப்படுபவர் அவர்!

தனக்கு கிடைத்த பல மேலான வாய்ப்புகளையெல்லாம் தான் சார்ந்த மக்களுக்காகப் பயன்படுத்தியவர். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி தொடர்பாக அன்றைய பிரதமர் நேருவுடன் எழுந்த கருத்து வேறுபாடுகளால் தனது சட்ட அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தவர்!

கடந்த 1946ம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் 10%க்கும் குறைவானவர்களே வாக்களிக்கும் உரிமைப் பெற்றிருந்தனர். அதற்கு முன்பாக நடந்த தேர்தல்களும், அனைவருக்குமான வாக்களிக்கும் உரிமையைக் கொண்டதல்ல. ஆனால், தான் எழுதிய அரசியல் சட்டத்தில், இந்தியாவின் வயது வந்தவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை அளித்திருந்தார் அம்பேத்கர்!

இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய அம்பேத்கர், கிட்டத்தட்ட தனது ஒட்டுமொத்த உடல்நலனையும் பணயம் வைத்து, ஒரு தனி ஆளாக அதை எழுதி முடித்தார் ஆதிக்க சக்திகளின் பல நெருக்கடிகளுக்கு மத்தியில்.

உலகிலேயே, ஒரு நீண்ட எழுதப்பட்ட மற்றும் அழகான சட்டத் தொகுப்பாக புகழப்படுகிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஆனால், 1951ம் ஆண்டிலேயே பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக தனது அமைச்சர் பதவியை தூக்கியெறிந்த அம்பேத்கர், 1952ம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில், வட மத்திய மும்பை தொகுதியில், அட்டவணை சாதி கூட்டமைப்பு கட்சியின் சார்பாக மக்களவைக்கு போட்டியிடுகிறார். (இந்தக் கட்சிதான் பின்னாளில் இந்தியக் குடியரசு கட்சியாக மாறுகிறது). எந்த மக்களுக்காக அதுவரை தன் வாழ்வையே அர்ப்பணித்து வந்தாரோ, அந்த மக்கள் தனக்கு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று நம்புகிறார்!

நான்கு முனைப் போட்டி நிலவிய இத்தேர்தலில், மாபெரும் மனிதரான அம்பேத்கருக்கு கிடைத்தது நான்காவது இடம்!

தேர்தல்களில் பின்னடைவு என்பது அம்பேத்கருக்கு புதிதல்ல. பிரிட்டிஷ் ஆட்சியில் நடைபெற்ற தேர்தல்களில் அவர் பல சமயங்களில் தோல்விகளையே சந்தித்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சபைக்கு கடந்த 1946ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனது சொந்த மராட்டிய மாநிலத்திலிருந்து(அப்போது பாம்பே ஸ்டேட்) அம்பேத்கரால் வெல்ல முடியவில்லை. மாறாக, பிரிக்கப்படாத வங்காளத்திலிருந்து அவர் தேர்வுசெய்யப்படும் கொடுமை நடக்கிறது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதன்முதலாக வயதுவந்த அனைத்துப் பிரிவு மக்களும் பங்களித்து நடைபெற்ற தேர்தலில், தான் நான்காவது இடம்பெற்றதை அவரால் எப்படி எளிதாக ஜீரணித்துக்கொள்ள முடியும்?

இத்தேர்தல் முடிவு, அவரின் உடல்நலனை இன்னும் மோசமாக பாதிக்கிறது. இதனையடுத்து, அவருக்கு நியமன ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறது. ‘நீ ஆனானப்பட்ட அம்பேத்கராக இருந்தாலும், எங்களை மீறி உன்னால் எதையும் செய்துவிட முடியாது’ என்று ஆதிக்கச் சாதிகள் கூறிய செய்திதான் இது.

ஆனாலும், மனம் தளராத அம்பேத்கர், 1954ம் ஆண்டு நடைபெற்ற பந்தரா மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அதிலும் மூன்றாவது இடமே பெறுகிறார். தேர்தல் என்பது ஆதிக்கவாதிகளின் சித்து விளையாட்டு மற்றும் அதில் வெல்வதற்கு நாமும் அவர்களின் வழியிலேயே செல்ல வேண்டுமென்பது அப்போது அவருக்கு இன்னும் நன்றாகப் புரிந்திருக்கலாம்!

மக்களுக்கான அம்பேத்கரின் வாழ்நாள் அர்ப்பணிப்பு, அவரின் ஈடுஇணையற்ற மேதமை, ஆதிக்கத்தை சமரசமற்று எதிர்த்தப் போக்கு போன்ற தகுதிகளெல்லாம் அவரின் தேர்தல் வெற்றிக்கு உதவவில்லை.

அம்பேத்கரின் தேர்தல் தோல்விகளென்பது, இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் மீது, மாபெரும் துடைக்க முடியாத இழுக்காக இன்றுவரை நீடித்து நிற்கிறது!

அதுமட்டுமல்ல, தேர்தல் வரலாறுகளில், பல தொடர்ச்சியான ஜனநாயக குற்றங்கள் இன்றுவரை இழைக்கப்பட்டுத்தான் வருகின்றன. இதை, மக்களின் அறியாமை என்று ஒரேவார்த்தையில் சொல்லி மட்டும் விலகிவிடுவதா அல்லது மக்கள் ஆதிக்க சக்திகளால் திட்டமிட்டே ஒரு குறிப்பிட்ட வழியில் இழுத்து செல்லப்படுகிறார்கள் என்பதா?

மக்களின் அறியாமைதான் பிரதான காரணம் என்றாலும், நமது கல்வித் திட்டம், வெகுஜன மீடியாக்கள், திட்டமிட்ட பன்முக பிரச்சாரங்கள் போன்றவைகளின் மூலமாக, மக்கள் எப்படி இருக்க வேண்டுமோ, அந்த சிந்தனை திறத்திலேயே வைக்கப்படுகிறார்கள்! மக்களிடம் ஒரு நல்ல தேர்தல் விழிப்புணர்ச்சி ஏற்பட்டாலும்கூட, அது திட்டமிட்டு மடைமாற்றப்படும் அல்லது வேறுவழிகளில் நீர்த்துப்போகச் செய்யப்படும். இங்கே, நரேந்திர மோடிக்கு வாக்குகள் கிடைக்கும்; ஆனால் வி.பி.சிங்கிற்கு வாக்குகள் கிடைக்காது!

தேர்தல் களத்தில் பங்கேற்பவர்களில், இருப்பவர்களிலேயே நல்லவர் ஒருவர் தொடர்ந்து கோலோச்சி வந்தாலும், அவருக்கெதிராக ஒரு கடுமையான பிரச்சார தளம் அமையும் வரைதான் அவரால் கோலோச்ச முடியும். அப்படி எதிர் தளம் வலுவாக அமைந்து, தேர்தல் சூத்திரங்கள் வலுவாக அமைக்கப்படும்போது, அவரைவிட மோசமான நபர்களால், அவர் தேர்தல் களத்தில் வீழ்த்தப்படுவார். திரிபுராவில் தொடர்ந்து பல்லாண்டுகள் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை, தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாரதீய ஜனதா கட்சி வீழ்த்தியது மட்டும் இதற்கு உதாரணமாகாது! இந்திய தேர்தல் வரலாற்றில் இதுபோன்று பல உதாரணங்களைக் கூறலாம்!

ஒரு கட்சியானது தேர்தல்களில் தொடர்ந்து பலமுறை வெற்றிபெறுவதை அடிப்படையாக வைத்து, அக்கட்சி சிறந்த கொள்கைகளைக் கொண்ட கட்சி அல்லது அதன் ஆட்சித் தலைவர் மிகவும் நல்லவர் என்ற முடிவுகளுக்கு வருவது, தேர்தல் ஜனநாயகத்தின் உண்மை நிலைகளுக்கு மாறானது.

மேலும், இந்திய தேர்தல் நடைமுறை இன்னும்கூட குழப்பான ஒன்று! அதாவது, இங்கு ஒரு கட்சி குறைந்தளவு வாக்கு சதவீதமே பெற்றிருந்தாலும்கூட, அதிகளவு இடங்களை வென்றிருக்கும். மற்றொரு கட்சி, கணிசமான வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தாலும்கூட, ஒரு இடத்தில்கூட வென்றிருக்காது. மேலும், தனிப்பெரும்பான்மை இடங்களில் வென்ற ஒரு ஆளுங்கட்சியைவிட, அதை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் மொத்தமாக சேர்த்து அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றிருக்கும்! இப்படியான ஒரு ஜனநாயக நீரோட்டத்தில்தான் நாம் நீந்திக் கொண்டுள்ளோம்.

ஆனால், அதைவிட,

“மறந்துகொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுப்படுத்தி தூண்டிக்கொண்டே இருப்பது எமது கடமை!”

என்ற வாசகம் கூடுதல் சாரம் கொண்டதாயும், உண்மை நிலையை வெளிப்படுத்துவதாயும், சூழலுக்கு ஏற்றதாயும் உள்ளதாக தோன்றுகிறது..!

 

– மதுரை மாயாண்டி