ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின் நாங்கள் நிற்போம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கண்ணா…இன்னும் தேதி வரலை, கடமை இருக்கிறது. நேரம் வரும்… நேரம் வரும் போது ஆண்டவன் ஆசீர்வாதத்தினால், மக்கள் ஆதரவினால் தமிழக மக்களுக்கு நல்ல நேரம் பிறக்கும்” என்று கூறினார்.
இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் மற்றும் 32 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ரஜினி மக்கள் மன்றத்தில் முதல் மாநாட்டை நடத்துவது பற்றி போயஸ் கார்டன் வீட்டில் மன்றத்தின் நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் கோவையில் அடுத்த மாதம் ரஜினி மக்கள் மன்றத்தின் முதல் மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினியை சந்தித்த பின் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது;
ஜூன் 2 ஆம் தேதிக்குள் மன்றத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த எங்களுக்கு ரஜினி அறிவுறுத்தி இருக்கிறார். பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. என கூறினர்.
மேலும், “ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் அவர் பின் நாங்கள் நிற்போம்” என்றனர்.