கொரோனா தடுப்புப் பணிகள் நடத்த வேண்டிய சுகாதார அமைச்சர் எங்கே : கே எஸ் அழகிரியின் கேள்வி

Must read

சென்னை

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் உள்ளது.   இதனால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள்ளர்.

அந்த அறிக்கையில் அழகிரி, “இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து தமிழகம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த ஏப்ரல் 5ம் தேதி வரை 4612 பேருக்குத் தான் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  தொடர் கண்காணிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா நோய் இருக்கிறதா, இல்லையா என்கிற பரிசோதனை நடத்தப்படவில்லை.என்பதால் அவர்கள் பீதியுடன் இருந்து வருகிறார்கள்.

சென்னையில் இருந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டிய சுகாதார அமைச்சர் சமீபகாலமாகப் பார்வையில் தென்படாமல் இருக்கிறார். ஆனால் புதுக்கோட்டையில், தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார்.

பத்திரிகையாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்குப் பதிலாக தற்போது சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து வருகிறார்.   இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள்.

தமிழக மாநிலத்தில் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டும். கொரோனா சிகிச்சைக்காக மத்திய அரசின் அனுமதியோடு பரிசோதனை கருவிகள், சுவாசக்கருவிகள், முகக்கவசங்கள், மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு உடைகள் உடனடியாக பெறுவதற்குத் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழக மக்களை அச்சுறுத்தி, பீதியில் ஆழ்த்தி வருகிற கொரோனா தடுப்பு சிகிச்சையில் சில குறைபாடுகள் இருப்பதைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article