கரூர்:  தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று  காலை 9 மணி முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2022- ல் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் செந்தில் பாலாஜி அண்மையில் ஜாமீனில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். மீண்டும் அமைச்சரானார். அவர் அமைச்சரானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில்,  வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனைகள் காரணமாக கடந்த  இரு ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், இதுவரை எங்கு உள்ளார் என்ற விவரம் தெரியவில்லை.  அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது கொலை செய்யப்பட்டரா என்பதும் தெரிய வில்லை.  செந்தில் பாலாஜியின் பினாமியாக அவர் இருந்ததாக கூறப்படுகிறது. அவரை தேடுவதில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டி வருகிறது.

இந்த நிலையில்,   அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களாக கருதப்படும் கரூர் ராயனூரில் வசிக்கும் கொங்கு மெஸ் மணி மற்றும் கரூர் ஆத்தூர் பிரிவு அருகே கோதை நகரில் வசிக்கும் சக்தி மெஸ் சக்திவேல் மற்றும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரும் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாருமான எம்சிஎஸ்.சங்கரின் வீடு இருக்கும் கரூர் பழனியப்பா நகரிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள்  அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 20  அதிகாரிகள், மத்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன்  வந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த  திடீர் சோதனை அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, 2011-2015 வரையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசுப் போக்கு வரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடு பட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, கரூர் ராம் நகரில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வந்த புதிய பங்களாவில் சோதனை நடத்திய அமலாக்கத் துறையினர், வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி, விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பினர். ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும், இதுவரை ஆஜராகாமல் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக  தலைமறைவாகவே இருந்து வருகிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது கொலை செய்யப்பட்டுவிட்டாரா என்பதும் புரியாத புதிராக உள்ளது.

2011-2015 காலகட்டத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறை ஒப்பந்தங்கள், கரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் என அனைத்தும் அவரது தம்பி அசோக் குமார் கட்டுப்பாட்டிலேயே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. அந்த துறையின் அதிகார மையமாகவே அசோக் மாறினார். மேலும், அவர் மீது நில மோசடி, ஆள்கடத்தல் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. அப்போது அமைச்சர் கே.என்.நேருவுக்கு, அவரது தம்பி ராமஜெயம் இருந்ததுபோல, செந்தில் பாலாஜிக்கு அசோக் குமார் என்று ஒப்பிடப்பட்டார்.

ஆனால், அசோக் வெளி நாடு தப்பிவிட்டார் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. அவரை தமிழ்நாடு காவல்துறை  கைது செய்ய ஆர்வம் காட்டாத நிலையில், அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்யும் முயற்சியாக அவ்வப்போது செந்தில்பாலாஜி உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் சோதனை மேற்கெண்டு வருகின்றனர்.