பெகாசஸ் ஸ்பைவேர் எங்கிருந்து இயக்கப்படுகிறது, இதற்குத் தேவையான உள்கட்டமைப்பை யார் வழங்குவது ?

Must read

 

சிக்கலில் சிக்காமல் இருக்க ஒப்பந்தத்தில் வெவ்வேறு பெயர்களைக் குறிப்பிடும் என்.எஸ்.ஓ. ரகசிய தகவல்கள் அம்பலம்.

ராணுவ தரத்திற்கு இணையான தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டது என்ற அடைமொழியுடன் சந்தையில் நிறைய ஒற்றறி மென்பொருள் இருந்தாலும் அது எதுவும் பெகாசஸ் ஸ்பைவேருக்கு நிகராகாது என்று சொல்லப்படுகிறது.

இந்த பெகாசஸ் மென்பொருளைப் பற்றியும் அது என்னென்ன வேலைகள் செய்கிறது என்பது பற்றியும் கடந்த ஒரு வாரகாலமாக பலரும் பேசிவரும் நிலையில், இந்த ஒற்றரி மென்பொருளை பயன்படுத்தத் தேவையான வன்பொருட்கள் பற்றிய பட்டியல் இப்போது பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

1300 சதுர அடி இடத்தில், இந்த மென்பொருளை தாங்கிச் செயல்படும் ஹார்ட்வேர்களை வைக்க சுமார் 1000 சதுர அடி ‘சர்வர் ரூம்’ தேவைப்படுகிறது, மீதமுள்ள 300 சதுர அடியில் இதனை இயக்கக்கூடிய ஆப்பரேட்டிங் ரூமாக செயல்பட தேவைப்படுகிறது.

Image Courtesy : India Today

இந்தத் தகவலை பெகாசஸ் மென்பொருளைத் தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனம் ஒரு வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

இருப்பினும், இந்த அறையின் சுவர்கள் ஐந்தடி கணத்தில் பதின்மூன்றடி உயரத்தில் அமைக்கப்பட வேண்டுமா அல்லது வேறு எப்படி அமைக்கப்படவேண்டும் என்பது குறித்த விவரம் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை.

இத்தாலியைச் சேர்ந்த இணையதள புலணாய்வு நிறுவனம் ஒன்றுக்கும் மெக்ஸிகோவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கும் நடந்த இ-மெயில் பரிமாற்றத்தில் இடம்பெற்ற விவரங்களை 2015 ம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டது, அதில் குறிப்பிட்டுள்ள விவரங்களின் படி,

18 டிகிரிக்கும் குறைவான வெப்ப நிலை பராமரிக்கப்படும் சர்வர் ரூமில் இரண்டு 42U ரேக்குகளை அமைக்கவேண்டும் மேலும் சர்வர்கள், மானிட்டர்கள், ரவுட்டர்கள், யூபிஎஸ் மற்றும் இதர தேவையான உபகரணங்கள் அங்கு வைக்கப்பட வேண்டும்.

சர்வர் மற்றும் தேவையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைத்தும் தயாரானதும் Asynchronous Transfer Mode (ATM) எனும் படங்கள், டேட்டா மற்றும் வீடியோ தரவுகளை அதிவேகமாக பரிமாறக்கூடிய இரண்டு இன்டர்நெட் இணைப்பை இருவேறு இணையதள சேவை நிறுவனத்திடம் இருந்துப் பெறவேண்டும்.

இதனுடன், வெளியில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேறு ஐ.பி. முகவரிகளுடன் தொடர்பு ஏற்படுத்தவேண்டும். மேலும், இதை இயக்குவதற்கு சில சிம் கார்டுகளும் தேவைப்படுகிறது.

 

செல்போன் சிக்னலில் எந்தவித கோளாறும் இல்லாமல் எந்த நேரமும் -95 டெசிபல் அளவுக்கு அதன் தரம் இருக்குமளவு பார்த்துக்கொள்ள வேண்டும், அதற்கு தேவையான சிக்னல் பூஸ்டர்களை பொருத்தவேண்டும், செல்போன் டவருக்கு அருகில் இந்த சர்வர் ரூமை அமைப்பது எதிர்பார்த்த பலனை தரும்.

அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில், இவை தவிர பெகாசஸ் மென்பொருளை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளருக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரின் கிரெடிட் கார்ட், கடவுச்சீட்டு நகல், மற்றும் வேறு பயன்பாட்டு கட்டண பில் ஆகியவை தேவைப்படுவதாக கூறியிருக்கும் என்.எஸ்.ஓ. இவை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.

இவை அனைத்தையும் செய்துமுடிக்க இரண்டு வாரங்கள் தேவைப்படும் நிலையில், இந்த ஏற்பாடுகள் முடிந்ததும் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்த முடியுமா என்றால் அதுதான் இல்லை, இதன் பின் மொத்தத்தில் 15 வார தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகே உளவு பார்க்க தொடங்க முடியும் என்று விவரிக்கிறது இந்தியா டுடே.

முதற்கட்ட நடவடிக்கைக்குப் பின்னான வரைவு ஒப்பந்தத்திற்குப் பிறகு, வாடிக்கையாளர் விவரங்கள் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்படும், என்.எஸ்.ஓ. வாடிக்கையாளரால் இஸ்ரேல் அரசுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்ற பட்சத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்படும். ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில் எந்த கேள்வியும் இல்லாமல் இந்த ஒப்பந்தத்தை என்.எஸ்.ஓ. நிறுவனம் ரத்து செய்துவிடும்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பின் ஆறு வார காலம், வாடிக்கையாளரின் அலுவலகத்தில் தனது மென்பொருளை நிறுவுவதுடன் அது சரியாக செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதோடு அவர்களின் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்குவார்கள்.

வாடிக்கையாளர் யார், எதற்காக பயன்படுத்துகிறார்கள், எத்தனை எண்களை கண்காணிப்பதற்கான உரிமம் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கொண்டு இந்த மென்பொருளின் விலையைத் தீர்மானிக்கிறார்கள், கடந்த 2015-16 ம் ஆண்டு கானா நாட்டில் 25 பேரைக் கண்காணிக்கத் தேவையான உரிமத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 60 கோடி ரூபாய் வாங்கியதாகத் தெரிகிறது.

500 எண்களைக் கண்காணிக்க மெக்ஸிகோ-விடம் ரூ. 240 கோடி வாங்கியதாகவும், 150 பேரை கண்காணிக்க பனாமா நாட்டிடம் ரூ. 110 கோடி வசூலித்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மென்பொருளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை என்.எஸ்.ஓ. மற்றும் குறிப்பிட்ட நாட்டு அரசுக்கு இடையே இல்லாமல் வேறு நிறுவனங்களின் பெயரில் ஒப்பந்தம் செய்தாலும், இந்த ஒப்பந்தத்தின் சரத்தில் இது யாருக்காக எதற்காக விற்பனை செய்யப்பட்டது என்பதை குறிப்பிடுகிறது.

இந்தியாவின் பாரதி ஏர்டெல், எம்.டி.என்.எல்., ஹாத்வே உள்ளிட்ட பல்வேறு இணையதள சேவை நிறுவனங்களுக்காக பெகாசஸ் திட்டங்களை ‘கேன்ஜஸ்’ என்ற பெயரில் செயல்படுத்தியுள்ளதாக இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறப்பட்டிருக்கிறது.

More articles

Latest article