தேனி:
தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓபிஎஸ் மகன் ரவிந்திர நாத் போட்டியிடுகிறார். அங்கு வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் மற்றும் பரிசு பொருங்கள் வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பான புகைப்படம் வீடியோக்கள் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து தேர்தல் ஆணையமோ, அந்த பகுதி தேர்தல் அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர்.
சேலை விநியோகம் நடைபெறுவது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டும், அதிகாரிகள் யாரும் நேரில் வரவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
தேனி தொகுதியில் அரசியல் களம் தகதகவென தகித்துக்கொண்டு இருக்கிறது. அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகனும், திமுக கூட்டணி சார்பில் அதிரடி ஈவிகேஎஸ் இளங்கோவனும், டிடிவி கட்சி சார்பில் சரவெடி தங்கத்தமிழ்செல்வனும் களத்தில் உள்ளனர். இதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. ஓபிஎஸ் தனது மகனின் வெற்றிக்காக தேனி தொகுதியிலேயே முடங்கி உள்ளார்.
இந்த நிலையில், ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகளை அங்குள்ள மக்களுக்கு விநியோகம் செய்து போன்ற போட்டோ, சேலைகள் பண்டல் பண்டலாக வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணை யத்துக்கும் புகார் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், தேர்தல் அதிகாரிகளோ கண்ணை மூடிக் கொண்டு இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சமீபத்தில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் கதிர் ஆனந்த் மற்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, சிமெண்ட் குடோனில் கட்டுக் கட்டாய் பணம், திமுக பிரமுகர் மீது சந்தேகம், விசிக பிரமுகர் காரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகளை துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் சகோதரர் ஓ.ராஜா பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர் அன்னபிரகாஷ் ஆகியோர் தேனீ மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவிந்திரநாத் சார்பாக வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எப்போது நடவடிக்கை எடுக்கும் என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நேற்று ஓபிஎஸ் நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதை முன்னிட்டு, அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுக்க ஸ்டீல் குடங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவது தொடர்பான புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.