கன்னியாகுமரி: ‘சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார்! அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது’ என சுவாமிதோப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அருகே உள்ள தெற்கு தாமரைக்குளத்தில் உள்ள தாமரைக்குளம் அய்யா வைகுண்டசுவாமி பதி (தாமரைபதி) கோவிலில் நடந்த அகிலத்திரட்டு அம்மானை உதய தின விழா நிகழ்ச்சியில் கவர்னர் ஆன்.ரவி கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து, அங்கு அய்யாவழி ஆய்வு மையத்திற்கு கவர்னர் ரவி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேசும்போது, அனைவரும் ஒன்று, அனைவரும் சமம் என்பதை தான் சனாதன தர்மம் கூறுகிறது. அனைவரும் ஒரே கடவுளை தான் வழிபட வேண்டும் என சனாதன தர்மம் கூறவில்லை. வேறு மொழி பேசலாம். வேறு உடை அணியலாம்; ஆனால் நாம் அனைவரும் ஒன்று தான் என எடுத்துரைத்தவர், நமது மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள் என்றும், அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்த மக்களிடையே கட்டாய மதமாற்றம் என்னும் கொடுமையை செய்தனர். பிரிட்டன் பார்லிமென்டில் ஹிந்துக்கள், ஹிந்து தர்மம் குறித்து கண்டனம் தெரிவித்தனர் என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர், ஆங்கிலேயர்களால்தான் ஜாதிய அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட்டதாக கூறியவர், இதன் காரணமாகவே பலர் கோவிலில் கூட நுழைய முடியாத நிலை எற்பட்டது. அப்போதுதான், கடவுள் மகாவிஷ்ணு வைகுண்டராக அவதரித்தார். அவர் மக்களிடையை ஒற்றுமையை ஒங்கச் செய்தார் என அய்யா வைகுண்டர் புகழ் பேசினார்.
மேலும், சனாதன தர்மம் மீது பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் நாராயணன் அவதரிப்பார். தற்போது, அய்யா வழியில் நமது நாட்டை வழி நடத்தி வருபவர் நமது பிரதமர் மோடி.
இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.