சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. அதன்படி,  ஜூன் 3-வது வாரத்தில் ஆன்லைன் மூலம் பாடங்களை தொடங்க திட்டமிட்டு உள்ளது. 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும், ஜுன் 14 முதல் தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன.  தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் 1 முதல் 12 ஆம் வகுப்புவரை உள்ள அனைத்து மாணவர்களையும் தமிழக அரசு ஆல்பாஸ் செய்துள்ளது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் கொரோனாவின் 3வது அலை இன்னும் ஓரிரு மாதங்களில் தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

ஆனால், ஜுன் பிறந்து, அடுத்த கல்வியாண்டு தொடங்கிவிட்ட நிலையில், மாணாக்கர்களுக்கு பாடங்களை நடத்துவது குறித்து தமிழகஅரசு ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்கட்டகமாக  11 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை ஜூன் 3-வது வாரத்தில் தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.‘ அதனுடன் 11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-15% கூடுதலாக மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் குறிப்பிட்ட பாடங்களுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைத்து 11 ஆம் வகுப்பு சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் அரசின் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14ந்தேதி முதல் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளை சுத்தம் செய்தல், சான்றிதழ்கள் வழங்குதல், மாணவர் சேர்க்கை, மதிப்பெண், தொலைக்காட்சி வழியாக கற்றல் குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் தொடக்க பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைவரும் 14ந்தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.