வேலூர்,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் மேல்சிகிச்சை பெற வேண்டி பரோல் கேட்டு வருகிறார்.
அவரது பரோல் தமிழக அரசால் மறுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, பேரறிவாளன் தாயார் தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.
இதுகுறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து பேரறிவாளன் பரோல் குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அரசு சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை எப்போது பரோலில் விடுவிப்பீர்கள் என்று செய்தியாளர்கள், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது, பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
அவரை பரோலில் விடுவிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும்.
நளினியை பரோலில் விடுவிப்பதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்று கூறினார்.